பெங்களூரு: கர்நாடக அரசு நடத்திய ஆய்வில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்களுக்கு அதிக நம்பிக்கை இருப்பது தெரியவந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் முறைகேடு நடப்பதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (ஈவிஎம்) நம்பிக்கை இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் கீழ் செயல்படும் கர்நாடகா கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆணையம், சமீபத்தில் வெளியிட்ட ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 91.31 சதவீதம் பேர் இந்தியாவில் தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடப்பதாகத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 83.61 சதவீதம் பேர் ஈவிஎம் இயந்திரங்கள் மிகவும் நம்பகமானவை என்றும், 83.6 சதவீதம் பேர் அது துல்லியமான முடிவுகளைத் தருவதாகவும் கூறியுள்ளனர். கலபுர்கி மண்டலத்தில் அதிகபட்சமாக 83.24 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பெங்களூரு மண்டலத்தில் மக்கள் கலவையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். சொந்த மாநில அரசின் ஆய்வே ஈவிஎம் இயந்திரங்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளதால் காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளது.
இந்தத் தகவலை முன்வைத்து பாஜகவினர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் கூறுகையில், ‘ராகுல் காந்தியின் பொய் பிரசாரத்திற்கு இந்த ஆய்வு முடிவு ஒரு சவுக்கடி’ என்று விமர்சித்துள்ளார். பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனாவாலா பேசுகையில், ‘தேர்தல் முறைகேடு என்று கூறிவரும் ராகுல் காந்திக்கு இது ஒரு நிதர்சனமான பாடம்’ என்று கூறியுள்ளார். மேலும், மக்கள் ஈவிஎம் இந்திரத்தை ஆதரிக்கும் நிலையில், உள்ளாட்சித் தேர்தலை வாக்குச்சீட்டு முறையில் நடத்தத் திட்டமிடும் சித்தராமையா அரசை பாஜக சாடியுள்ளது.
இதற்குப் பதிலளித்துள்ள கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, ‘இந்த ஆய்வை நடத்திய நிறுவனத்திற்குப் பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு உள்ளது, இது மாநில அரசின் அதிகாரப்பூர்வ ஒப்புதல் பெற்றது அல்ல’ என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
