திருமலை: மனைவி இறந்து விட்ட வேதனையால் 3 குழந்தைகளுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்றுவிட்டு தந்தையும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம் துடுமுலா கிராமத்தைச் சேர்ந்த சுரேந்திரா(35). கட்டுமான தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி(32). மகள்கள் காவ்ய(7), தியானேஸ்வரி(4), மகன் சூர்யாககன்(2). மகேஸ்வரிக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதாம். இதனால் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக தற்கொலை செய்து கொண்டாராம். மனைவி இறந்த வேதனை ஒருபுறம் என்றால், 3 குழந்தைகளையும் வளர்க்க முடியாமல் சுரேந்திரா தவித்துள்ளார்.
மேலும் வேலைக்கு செல்லாததால் குடும்பத்தை நடத்த வருமானம் இல்லாமல் கடும் அவதிப்பட்டுள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது குழந்தைகளுக்கு சரியான உணவு, உடை தரமுடியாத வேதனையில் கண் கலங்கியுள்ளார். எனவே அவர்களை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்வது என முடிவு செய்துள்ளார். அதன்படி காவ்ய, தியானேஸ்வரி, சூர்யாககன் ஆகியோரிடம் பாசமாக பேசியபடி பாலில் விஷம் கலந்து குடிக்க வைத்துள்ளார். விஷம் கலந்த பாலை குடித்த குழந்தைகள் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்ததை பார்த்து கதறிபடி சுரேந்திராவும் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
நேற்று நீண்ட நேரமாகியும் சுரேந்திரா வீடு திறக்கப்படவில்லை. யாரும் வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டு ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது 3 குழந்தைகள் வாயில் நுரைதள்ளியபடியும் சுரேந்திரா தூக்கில் தொங்கியபடியும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி இறந்த வேதனையில் குழந்தைகளையும் வளர்க்க முடியாததால் அவர்களை கொன்றுவிட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திஉள்ளது.
