×

களை கட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்

 

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்து வரும் பக்தர்கள்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் மார்கழி மாதம் தொடங்கி தை மாதம் முடியும் வரை பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து வழிபட்டு செல்வர். இந்தாண்டு மார்கழி மாத தொடக்கத்திலே மாலை அணிந்து, விரதம் தொடங்கிய பக்தர்கள் குழுக்களாக சேர்ந்து பாதயாத்திரையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு அன்று சுவாமி தரிசனம் செய்வதற்காக விருதுநகர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள், கடந்த சில தினங்களாக திருச்செந்தூர் வந்த வண்ணம் உள்ளனர். வழிநெடுகிலும் முருகர் பாடல் பாடி, ஆடி வரும் பக்தர்கள் திருச்செந்தூர் எல்லை வந்தவுடன் கூட்டமாக ஒன்று சேர்ந்து காவடி, பால்குடம் எடுத்தும்,

அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் பக்தி பரவசத்துடன் கோயிலை நோக்கி விரைந்து செல்கின்றனர். இதனால் நகரமே குதூகலமடைந்துள்ளது. ஆங்கில புத்தாண்டையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், பிற்பகல் 2.30 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. 3ம்தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெறுகிறது.

வேளாங்கண்ணி பேராலயத்தில் நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனை
நாகை: நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பேராலயத்தில் உள்ள விண்மீன் ஆலயத்தில் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், கொங்கனி ஆகிய 5 மொழிகளில் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. 2025ம் ஆண்டுக்கு நன்றி தெரிவித்து வழியனுப்பும் விதமாக இரவு 10.45 மணியில் இருந்து 11.45 மணி வரை பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் மறையுரையும், 2026ம் ஆண்டை வரவேற்கும் விதமாக இரவு 11.45 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் திவ்ய நற்கருணை சிறப்பு பாடல் திருப்பலியும் நடக்கிறது.

நள்ளிரவு 12 மணிக்கு தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் குத்து விளக்கேற்றி புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதைதொடர்ந்து வாணவேடிக்கை நடைபெறும். பேராலயத்தில் வண்ண விளக்குகள் எரிய விடப்படும். புத்தாண்டை கொண்டாடுவதற்காக பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் வர துவங்கினர். மேலும் கடலில் இறங்கி குளிப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எஸ்பி செல்வக்குமார் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் குவியும் சுற்றுலா பயணிகள்
புதுச்சேரி: புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் வெளி நாட்டிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதையொட்டி இன்று மதியம் 2 மணி முதல் நாளை காலை 9 மணி வரை ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்களை நிறுத்தவும், நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடற்கரை சாலைக்கு செல்ல பிஆர்டிசி சார்பில் 30 கட்டணமில்லா மின்பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள ஆசிரம ஆடிட்டோரியத்தில் ஐஜி ஏ.கே.சிங்லா தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதையடுத்து டிஐஜி சத்தியசுந்தரம் கூறியதாவது: புதுவருடத்தை கொண்டாட புதுச்சேரி மக்களும், சுற்றுலா பயணிகளும் கடற்கரை சாலை, சுற்றுலா தலங்களில் கூட இருக்கிறார்கள்.

அதற்கேற்ப 4 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கிறோம். இன்று மதியம் 12 மணி முதல் இந்த கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும். இதன் மூலம் புத்தாண்டை அமைதியாக கொண்டாட முடியும். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர். பீச் ரோட்டில் 70க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். ட்ரோன்கள் மூலமாகவும் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து அந்தந்த போலீசாரால் கண்காணிக்கப்படும். அதிக கூட்ட நெரிசல் இடங்களுக்கு வருவதை குழந்தைகள், முதியவர்கள் தவிர்ப்பது நல்லது.

சூரிய உதயத்தை கண்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி: 2025ம் ஆண்டு இன்றுடன் நிறைவடைந்து நாளை 2026 புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டை கொண்டாட அனைத்து தரப்பு மக்களும் தயாராகி வருகின்றனர். அதன்படி சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இன்று நள்ளிரவு மற்றும் நாளை புத்தாண்டை கொண்டாட தமிழகத்தின் பிற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இன்று அதிகாலை முதலே திரளான சுற்றுலா பயணிகள் திரிவேணி சங்கமத்தில் கூடினர். பின்னர் குறிப்பிட்ட நேரத்தில் இந்தாண்டின் கடைசி நாளில் தோன்றிய சூரியனை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரும்பாலானோர் செல்போன்களில் புகைப்படம் எடுத்து கொண்டனர். இதனால் இன்று பெரும்பாலான தங்கும் விடுதிகள் நிரம்பி வழிந்தது. தொடர்ந்து இன்று மாலை சூரியன் மறையும் காட்சியையும், நாளை 2026ம் ஆண்டின் முதல் சூரிய உதயத்ைத காணவும் சுற்றுலா பயணிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்தநிலையில் கன்னியாகுமரி கடற்கரையில் புத்தாண்டை வரவேற்க இரவில் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் வாலிபர்கள் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும் கன்னியாகுமரியில் எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நட்சத்திர ஓட்டல்களில் ஆபாச நடன நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீச்சல்குளம் அருகே புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை போடப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு மேல் பெரும்பாலான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags : New Year ,Murugan ,Tiruchendur ,Margazhi ,Thai ,
× RELATED எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள்...