×

உக்ரைன் திடீர் மறுப்பு ரஷ்ய அதிபர் புடின் வீட்டை நாங்கள் தாக்கவில்லை: மோடி, டிரம்ப் கண்டனம்

புதுடெல்லி: ரஷ்யா -உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக போர் நீடித்து வருகின்றது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையே பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரப்பூர்வ இல்லம் குறிவைக்கப்பட்டுள்ளது. அதிபர் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்த முயற்சித்ததாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புடின் இல்லத்தை நோக்கி வந்த 98 டிரோன்கள் அழிக்கப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யா மீண்டும் தனது வேலையைத் தொடங்கியுள்ளது. அதிபர் டிரம்பின் குழுவுடனான நமது கூட்டு ராஜதந்திர முயற்சிகளின் அனைத்து சாதனைகளையும் சீர்குலைக்க, அது ஆபத்தான குற்றச்சாட்டை சுமத்துக்கிறது.

அமைதியை உருவாக்க நாங்கள் தொடர்ந்து ஒன்றாகச் செயல்பட்டு வருகிறோம். புடினின் வீடு மீதான தாக்குதல் ஒரு புனைகதை. அவர்கள் பொய் சொல்கின்றனர். எங்கள் மீது அவர்கள் நடத்தும் தாக்குதல்களை நியாயப்படுத்தவும், அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க ரஷ்யா மறுப்பதை நியாயப்படுத்தவும் முயற்சிக்கிறது இந்த நேரத்தில் உலக நாடுகள் மவுனமாக இருக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.

நிலையான அமைதியை உருவாக்க மேற்கொள்ளப்படும் பணிகளை ரஷ்யா சீர்குலைப்பதை நாம் அனுமதிக்க முடியாது. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இந்த தாக்குதல் முயற்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடி கண்டித்துள்ளனர். இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: தனது வீட்டை உக்ரைன் டிரோன்கள் தாக்குதல் நடத்த குறிவைத்தது என்று ரஷ்ய அதிபர் புடின் என்னிடம் கூறினார். இது நல்லதல்ல. நான் மிகவும் கோபமாக இருக்கிறேன். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ”ரஷ்ய அதிபரின் இல்லம் குறிவைக்கப்பட்டதாக வந்த செய்திகளால் நான் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளேன். தொடர்ந்து நடைபெற்று வரும் ராஜதந்திர முயற்சிகளே பகைமைகளை முடிவுக்கு கொண்டு அமைதியை அடைவதற்கான மிகவும் சாத்தியமான வழியாகும். ரஷ்யாவும், உக்ரைனும் இந்த முயற்சிகளில் கவனம் செலுத்துமாறும், அவற்றை பலவீனப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chancellor ,Putin ,Ukraine ,Modi ,Trump ,New Delhi ,Russia ,US ,President ,Zelensky ,President Putin ,
× RELATED ஜப்பானை பின்னுக்கு தள்ளி 4வது பெரிய பொருளாதார நாடாக முந்தியது இந்தியா