திருமணமான 6 மாதத்தில் பரிதாபம் மின்துறை ஊழியர் தூக்கு போட்டு தற்கொலை

*புதுச்சேரியில் பரபரப்பு

பாகூர் : புதுச்சேரி அருகே திருமணமான 6 மாதத்தில் மின்துறை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பாகூர் திருமால் நகர் இரண்டாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (31). புதுச்சேரி அரசு மின்துறையில் ஒயர்மேனாக பாகூரில் பணிபுரிந்து வந்தார்.

இவர் கடந்த ஆறு மாதத்துக்கு முன்பு தாமரைக்குளம், நத்தம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை பாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டு கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் மோகன்ராஜ் கடந்த ஒரு வாரமாக செல்போனில் அடிக்கடி யாரிடமோ பேசி வந்துள்ளார். இதுபற்றி அவரது மனைவி பாரதி கேட்டபோது மோகன்ராஜ் எந்த பதிலும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

பிறகு அவரது தாய், தந்தை மற்றும் சகோதரியிடம் பாரதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாரதி கடந்த 24ம் தேதி தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் தொடர்ந்து அங்கேயே தங்கி உள்ளார்.

இதனால் பாரதியை பார்க்க நேற்று மோகன்ராஜ் சென்றபோது, அவரது மாமியார், செல்போனில் பேசியது சம்பந்தமாக கேட்டதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மோகன்ராஜ் அவரது மனைவியை ஒரு அடி அடித்து விட்டு, இனிமேல் நான் உயிருடன் இருந்தால்தானே என்னை கேட்பீர்கள், நான் இறந்துவிட்டால் யாரைப் போய் கேட்பீர்கள் என்று கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டார்.

பிறகு மோகன்ராஜ் தனத தாயார் மற்றும் சகோதரியிடமும் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று பிற்பகலில் வீட்டின் கதவை மூடிக்கொண்டு அங்கிருந்த புடவையை எடுத்து படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது சம்பந்தமாக பாரதி கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து, மோகன்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மோகன்ராஜின் உடலை கண்டு மனைவி பாரதி மற்றும் குடும்பத்தினர் கதறியழுதனர். திருமணமான 6 மாதத்தில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: