*தடுப்பு வேலிகள் போடப்படுமா?
புதுச்சேரி : பாண்டி மெரீனாவில் பச்சை நிற பாசிப் படிந்த பாறைகளால் மனித உயிருக்கு ஆபத்து தொடரும் நிலை உள்ளது. எனவே அங்கு தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. புதுச்சேரி சுற்றுலா பகுதிகளில் ஒன்றாக கடற்கரை (பீச்) விளங்குகிறது.
பிரெஞ்சு கலாச்சாரத்தை உள்ளடக்கிய இங்கு பல்வேறு வெளிமாநில, வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் புதுச்சேரிக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது.
இந்தாண்டும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக வெளிமாநிலத்தவர் குவிந்துள்ளதால் நகர பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே சுற்றுலா வந்துள்ள பயணிகள் தற்போது புதுச்சேரியின் புதிய வரவான பாண்டி மெரீனாவையும் பார்வையிட்டு செல்கின்றனர்.
தற்போது புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் களைகட்டியுள்ள நிலையில் கடற்கரை பகுதிக்கு வெளிமாநிலத்தவரும், உள்ளூர்வாசிகளும் படையெடுத்து வருகின்றனர். கடற்கரையில் அமர்ந்து இயற்கையின் அழகை ரசித்தபடி குடும்பத்துடன் பொழுதை கழிப்பதை காண முடிகிறது.
இதேபோல் கடலில் இறங்கி ஆனந்த குளியலும் போடுகின்றனர். உள்ளூர்வாசிகளுக்கு கடற்கரை பகுதிகளின் நிலவரம் குறித்து தெரிவதால் ஆழமான பகுதிக்கு செல்வதை பெரும்பாலும் தவிர்த்து விடுகின்றனர். ஆனால் வெளிமாநில சுற்றுலா பயணிகளும், இளைஞர்கள் பட்டாளமும் காவல்துறை எச்சரிக்கையை மீறி கடலின் ஆழமான பகுதிக்கு இறங்கி குளியல் போடுகின்றனர்.
இவ்வாறு ஆனந்த குளியல் போடும் பகுதியில் ஒன்றாக விளங்கும் பாண்டி மெரீனாவில் கடற்கரையில் கொட்டி வைத்துள்ள கருங்கற்கலில் படிந்துள்ள பாசிகள் மீதும் ஏறி இளைஞர்கள், பொதுமக்கள் ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கடற்கரை பாறைகள், கருங்கல் இடுபாடுகளில் சிக்கி காயமடைந்த பலர், இதை பெரிதுபடுத்தாமல் வீடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.
ஓரிரு தினங்களுக்குமுன்பு சென்னை உதவி பேராசிரியை ஒருவர் கடற்கரையில் கொட்டப்பட்ட பாறை மேல் நின்று ரீல்ஸ் எடுத்தபோது கால் வழுக்கி பாறை இடுக்குள் சிக்கி தவித்த நிலையில் நீண்ட நேரத்திற்குபின் மீட்கப்பட்டார்.
இதேபோல் அங்குள்ள பாறைகளில் அவ்வப்போது ஏறி வழுக்கி விழுந்தவர்களை, அவர்களது உறவினர்களும், நண்பர்களும் காயங்களுடன் மீட்டு அழைத்துச் சென்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.
எனவே பாறைகள் மற்றும் கருங்கல்லில் பாசிப் படிந்து பச்சை நிறுத்தில் காணப்படும் பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஏறி பயன்படுத்த முடியாதபடி தடுப்பு வேலிகள் போட வேண்டும் அல்லது காவல் துறையினரின் கண்காணிப்புகளை அங்கு தீவிரப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
