“இயற்கைத்தாயின் பெருமகன்” – நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி சீமான் பதிவு

 

சென்னை: அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன் என்று இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினத்தையொட்டி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; மண்ணையும், மக்களையும் நேசித்து, தாய் மடியென இயற்கை அன்னையைப் போற்றிக் கொண்டாடிய பெருந்தமிழர். அனைத்து உயிர்களையும் அன்புகொண்டு நேசித்து நின்ற இயற்கைத்தாயின் பெருமகன், உழவாண்மையின் தேவையை உலகுக்கு உணர்த்திய பெருந்தகை, நஞ்சில்லா உணவு, அதுவே எம் கனவு! என்ற பெருங்கனவை நமக்குள் விதைத்த வேளாண் பேரறிஞர், “விதைத்துக்கொண்டே இரு! முளைத்தால் மரம்; இல்லையேல், மண்ணுக்கு உரம்!” என்று இளந்தலைமுறைக்குக் கற்பித்த பேராசான்,

மண்ணைக் காக்கவும், பாரம்பரிய விதைகளை மீட்கவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய மண்ணுரிமைப் போராளி. வேப்ப மரத்தின் காப்புரிமையைப் போராடி பெற்று தந்த பேரரண், ‘விதைகளே பேராயுதம்’ என்று வீரமுழக்கமிட்ட தமிழ்ப்பெருங்குடியோன், இளந்தலைமுறைப் பிள்ளைகளை இயற்கை வேளாண்மையை நோக்கியும், தாய் மண்ணை நோக்கியும் திரும்பச் செய்த எங்களின் முன்னத்தி ஏர், இயற்கையின் மொழியறிந்து வாழ்வியலைப் பேணுவதற்கு தற்காலத் தமிழ்ப்பிள்ளைகளுக்குப் பாடமாய் இருக்கிற வேளாண்மை வேதம், எங்களின் பெரிய தகப்பன் இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: