கருங்கல்: கருங்கல் அருகே திருட்டு போன பைக்கை, சம்பந்தப்பட்ட நபரே கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கருங்கல் அருகே பாலப்பள்ளம் பரப்புவிளையை சேர்ந்தவர் ராஜேஷ் (33). எலக்ட்ரீஷியன். கடந்த 27ம்தேதி மாலை, இவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்த பைக்கை மர்ம நபர் திருடி சென்றார். இது குறித்து அன்று இரவு ராஜேஷ், கருங்கல் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். ஆனால் போலீசார் வந்து எதுவும் விசாரிக்க வில்லை. எனவே ராஜேஷ் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தபோது, இரவு 7.45 மணியளவில் நடந்து வந்த வாலிபர் ஒருவர் ராஜேஷ் பைக்கில் ஏறி ஒயரை துண்டித்து விட்டு, குளச்சல் சாலை நோக்கி செல்லும் காட்சி இருந்தது.
முன்னதாக அந்த வாலிபர் பாலப்பள்ளம் ரோட்டில் இருந்து நடந்து வந்த காட்சிகளும் கிடைத்தன. எனவே பாலப்பள்ளம் ரோட்டில் தனக்கு தெரிந்த நண்பர்களின் வீடுகளில் இருக்கும் கேமராக்களை ஆய்வு செய்த போது சம்பந்தப்பட்ட நபர் பாலப்பள்ளம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு நிற்கும் காட்சிகள் இருந்தன. எனவே டாஸ்மாக் பாரில் உள்ள கேமராக்களை ராஜேஷ் சென்று பார்வையிட்டார். அப்போது பைக்கை திருடிய நபர், அந்த பாரில் 2 பேருடன் சேர்ந்து மது அருந்தும் காட்சி இருந்தது. குளச்சலை சேர்ந்த அந்த 2 பேர், இந்த பாருக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் என்பதும், பாரில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவரின் நண்பர்கள் என்பது தெரிந்தது. உடனடியாக அவர்களை தேடி குளச்சலுக்கு ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சென்றனர்.
அவர்களிடம் விசாரித்த போது பைக்கை திருடிய நபர், நாகர்கோவிலை சேர்ந்தவர் என்பதும், அடிதடி வழக்கில் சிறையில் இருந்த போது தங்களுக்கு அறிமுகம் ஆனார் என தெரிவித்தனர். வேறொரு வழக்கில் உள்ளே இருந்த அந்த நபர் கடந்த 26ம்தேதி தான் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தார். பார்ட்டி வைக்க வேண்டும் என கூறி எங்களிடம் கேட்டதால், அவரை பாலப்பள்ளத்துக்கு அழைத்து மது வாங்கி கொடுத்தோம். பஸ்சுக்கு ரூ.100 கொடுத்து அனுப்பி வைத்தோம். அவர் பைக்கை திருடியது தெரியாது என்றனர். இதையடுத்து அந்த நபருக்கு செல்போனில் இருந்து பேசினர்.
அப்போது அவர் அந்த நண்பர்களிடம், போதையில் வேறொருவர் பைக்கை திருடி விட்டு வந்து விட்டேன். நாகர்கோவில் மணிமேடை அருகே வரும் போது பெட்ரோல் தீர்ந்து விட்டது. அங்குள்ள பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் போட்டு விட்டு தப்ப முயன்ற போது என்னை பிடித்து விட்டனர். பைக்கை அங்கேயே போட்டு விட்டு வந்து விட்டேன் என்றார். இதையடுத்து நேற்று மாலையில் ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் நாகர்கோவில் மணிமேடையில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு வந்த போது அந்த பைக் நின்றது. இதை பார்த்ததும் ராஜேஷ் மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் பெட்ரோலுக்கான பணத்தை கொடுத்து பைக்கை மீட்டு சென்று விட்டார்.
இதற்கிடையே காவல் நிலையத்துக்கு சென்று தாங்கள் கொடுத்த புகார் மனு குறித்து கேட்ட போது, முதலில் புகார் மனுவை காண வில்லை என்றவர்கள், சிறிது நேரம் தேடி, அந்த புகார் மனுவை எடுத்தனர். அவர்களிடம் நானே பைக்கை மீட்டு விட்டேன் என தகவல் கூறி விட்டு ராஜேஷ் வந்தார். போலீசார் செய்ய வேண்டிய வேலையை செய்து, திருட்டு போன பைக்கை சம்பந்தப்பட்ட நபரே மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க எஸ்.பி. உத்தரவிட்ட போதும், காவல் நிலையங்களில் அப்படி செய்வதில்லை. அப்படியே கிடப்பில் போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என பொதுமக்கள் வேதனையுடன் கூறினர்.
