*போலீசார் மீட்டனர்
புதுச்சேரி : புதுச்சேரி பழைய நீதிமன்றம் எதிரேவுள்ள கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள பாறை கற்கள் மீது நேற்று இரவு 27 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுதுகொண்டே நின்றிருந்தார். திடீரென அவர் தற்கொலை செய்ய கடலில் குதிக்க முயன்றார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஒதியஞ்சாலை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்தனர். காவல் துறையின் வீரமங்கை பெண் போலீசாரும் அங்கு வந்தனர். அந்த பெண்ணிடம் நைசாக பேசி, அங்கிருந்து மீட்டு தூக்கி மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், தற்கொலை செய்ய கடலில் குதிக்க முயன்ற அந்த பெண், புதுச்சேரி பாகூரை சேர்ந்தவர் என்பதும், குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி பாண்டி மெரினாவுக்கு சுற்றுலா வந்த சென்னை உதவி பேராசிரியை, நேற்று முன்தினம் கடற்கரையில் கொட்டப்பட்டுள்ள பாறைகள் மேல் நின்று ரீல்ஸ் எடுத்தபோது கால் வழுக்கி பாறைக்கு அடிக்குள் சிக்கி தவித்தது குறிப்பிடத்தக்கது.
