×

கோயில்களில் முதல் மரியாதை என்பது எப்போதும் தெய்வத்துக்கு தான் : ஐகோர்ட் கருத்து

சென்னை: கோயில்களில் முதல் மரியாதை என்பது எப்போதும் தெய்வத்துக்கு தான் கொடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு 1992 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த பஞ்ச முத்திரை முதல் மரியாதை 2023 ஆம் ஆண்டு முதல் திடீரென நிறுத்தப்பட்டதை எதிர்த்து ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “காஞ்சி காமகோடி பீடம் – சங்கர மடம், ஸ்ரீ அகோபில மடம், நாங்குநேரி ஸ்ரீ வாணாமலை மடம், மைசூர் ஸ்ரீ பரகால ஜீயர் மடம் மற்றும் உடுப்பி ஸ்ரீ வியாசராயர் மடம் ஆகிய ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள் வழங்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வு, கோயிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான் கொடுக்கப்பட வேண்டும். மடாதிபதிகளுக்கான சிறப்பு மரியாதைகளை, ஒரு போதும் உரிமையாக அவர்களால் கேட்க முடியாது எனக் கூறி, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.

Tags : Chennai ,Chennai High Court ,Kanchipuram Devaraja Swami Temple ,Ashram ,
× RELATED 2029ம் ஆண்டும் பாஜகவே ஆட்சியைப் பிடிக்கும்: ராகுல் காந்திக்கு அமித் ஷா சவால்