*அருவிகளில் குடும்பத்துடன் உற்சாக குளியல்
தென்காசி : அரையாண்டு தேர்வு விடுமுறை காரணமாக குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக மதிய வேளையில் வெயிலும், காலை மற்றும் மாலையில் பனியுடன் குளிர்ச்சியும் காணப்படுகிறது.
மழை இல்லாததால் அருவிகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் ஓரளவு நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியில் மூன்று பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. புலி அருவியில் குறைவாக தண்ணீர் விழுகிறது. சிற்றருவியில் நன்றாக தண்ணீர் விழுகிறது.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு வரை ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் தற்போது மண்டல பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை அடைக்கப்பட்டது. இதனால் ஐயப்ப பக்தர்களின் வருகை இல்லாத சூழலில், கிறிஸ்துமஸ் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை நேற்று அதிகரித்து காணப்பட்டது. குற்றாலத்தில் கடந்த 2024ம் ஆண்டு துவங்கி தற்போது வரை மெயினருவியில் தண்ணீர் தொடர்ச்சியாக அதாவது அருவி வறண்டு விடாத அளவிற்கு தண்ணீர் விழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
