×

ஈரோடு மாநகராட்சி பகுதி வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளில் இருந்து 4,305 டன் நுண் உரம் தயாரிப்பு

ஈரோடு : ஈரோடு மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளில் இருந்து இதுவரை 4,305 டன் நுண் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாநகராட்சியின் 60 வார்டுகளும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில், மொத்தம் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 1-வது மண்டலத்தில் மட்டும் 31 ஆயிரத்து 280 வீடுகள் உள்ளன.

இவற்றில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தினமும் வீடு, வீடாக நேரடியாக சென்று சேகரித்து வருகின்றனர். இந்த குப்பைகள் வைராபாளையம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு தரம் பிரிக்கப்படுகின்றன.

பின்னர் மக்கும் குப்பை அங்குள்ள நுண் உரமாக்கல் மையத்துக்கும், மக்காத குப்பை மறுசுழற்சி மையத்துக்கும் கொண்டு செல்லபடுகிறது.அங்கு அந்த குப்பைகள், நுண் உரமாக்கல் திட்டத்தின் மூலமாக உரமாக மாற்றப்படுகின்றன. இந்த நுண் உரம், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த உரத்தை விவசாயிகள் நெல், மஞ்சள்,தென்னை, கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு நுண் உரமாக பயன்படுத்தி பயன்பெற்று வருகின்றனர்.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி, 1-வது மண்டலத்தில், வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் இருந்து தினமும் சுமார் 10 டன் வரையிலான குப்பைகள் கரிக்கப்படுகின்றன.இதில் மக்கும் குப்பைகளை இயந்திரத்தில் போட்டு தூளாக்கி, அதை தொட்டிக்குள் 42 நாள்கள் வைத்து பதப்படுத்தி நுண் உரமாக மாற்றப்படுகிறது.

இந்த உரத்தை தவிடு, வெல்லம், தயிர் போன்றவற்றை பயன்படுத்தி பாக்டீரியா மூலமாக தயாரிப்பதால் 100 சதவீதம் இயற்கை உரமாகவே கிடைக்கிறது. இங்கு கிடைக்கும் நுண் உரங்கள் மதுரை, கோவை வேளாண்மை பல்கலைக்கழகங்களுக்கு தர ஆய்வுக்கு அனுப்பப்படுகின்றன. அந்த ஆய்வின் முடிவில் நைட்ரஜன்,பொட்டாஷ், கால்ஷியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளதால் அதை விவசாயத்துக்கு பயன்படுத்தலாம் என வோண்மை பல்கலைக்கழகம் சான்றிதழ் அளித்த பின்னரே அதை விவசாயிகளுக்கு வழங்குகிறோம்.

வேளாண்மைத்துறை அலுவலகத்திலும் விற்பனை உரிமம் பெறப்பட்டுள்ளது. இந்த நுண் உரம் தயாரிக்கும் திட்டம் ஈரோடு மாநகராட்சி பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை மொத்தம் 4 ஆயிரத்து 305 டன் நுண் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 820 டன் நுண் உரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் விவசாயிகளுக்கு இலவசமாகவே வழங்கி உள்ளோம். எனவே, நுண் உரம் தேவைப்படும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஈரோடு மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களை அணுகி அவற்றை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். நுண் உரம் வாங்க வரும்போது விவசாயிகள்ஆதார் அட்டை, உழவர் பாதுகாப்பு திட்ட அட்டை போன்றவற்றை கொண்டு வந்து பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Erode Corporation ,Erode ,
× RELATED ஜனவரி 1 முதல் நெல்லை, முத்துநகர், பொதிகை...