×

நெல்லை மாவட்டத்தில் பயிர்களை சேதப்படுத்தும் பறவைகள் பட்டாசு வெடித்து விரட்டியடிப்பு

நெல்லை : நெல்லை மாவட்டத்தில் நெல் பயிர்களை சேதப்படுத்தும் பறவைகளை விவசாயிகள் பட்டாசு வெடித்து விரட்டி வருகின்றனர்.நெல்லை மாவட்டத்தில் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை கார் சாகுபடியும், நவம்பர் முதல் பிப்வரி வரை பிசானசாகுபடி காலங்களில் நெற்பயிர்கள் நடவு செய்யப்படுகிறது. இதில் கடந்த நவம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து விவசாயிகள் கார்சாகுபடி அறுவடைக்கு பின் பிசான சாகுபடியில் கவனம் செலுத்தினர். வடகிழக்கு பருவமழை காலம் தொடக்கத்தில் இருந்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பரவலாக பெய்தது.

இதனால் தாமிரபரணி ஆற்று பாசன பகுதிகளான மானூர், பள்ளமடை, அருகன்குளம், பாளை, தருவை, கோபாலசமுத்திரம், மேலச்செவல், சேரன்மகாதேவி, அருகன்குளம், தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.இதற்காக நிலத்தை உழுது சீர்படுத்தி நெல் விதைகளை தூவி நல்ல செழிப்பாக வளர்ந்த நாற்றுக்களை வயல்களில் நடவு செய்துள்ளனர்.

இந்நிலையில் நெல் பயிர் நாற்றங்கால் நடவு செய்த நிலையில் பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்கவும், கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை விவசாயிகள் எடுத்துள்ளனர். இருந்தபோதும் நெல் வயல்களில் அதிகளவு புழு, பூச்சிகளை பிடிக்க கொக்கு, புறாக்கள் உள்ளிட்ட பறவைகள் படையெடுத்து வருகின்றன. அவ்வாறு வயல்வெளிக்கு வரும் பறவைகள் பயிர்களை சேதப்படுத்துகின்றன.

இதனால் கடன் வாங்கி பயிர் செய்துள்ள நெல் பயிர்களை பறவைகள் சேதப்படுத்துவதை தடுக்க வயல்காட்டை சுற்றிலும் கம்புகள் ஊன்றி கருப்பு பிளாஸ்டிக் பைகளை கட்டி காற்றில் பறக்க விடுவதும், கம்புகளில் வெள்ளை வேட்டிகளை கிழித்து கட்டி பறக்கவிடவும், சில்வர் பாத்திரங்களில் கம்புகளை வைத்து தட்டி சத்தம் எழுப்பியும் செய்கின்றனர்.

இன்னும் சில விவசாயிகள் நெல் பயிர்கள் பக்கத்தில் பறவைகள் தலைவைக்காத வகையில் பட்டாசுகளை வெடிகின்றனர். இதனால் வயல்பரப்புகளுக்கு வரும் பறவைகள் பதறியடித்து பறந்து சென்றுவிடுகின்றன. நெல் பயிர்களும் காப்பாற்றப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Tags : Nellai district ,Nellai ,
× RELATED காஞ்சி காமாட்சியம்மன் கோயில்...