100 நாட்கள் திட்டத்தை முடக்கிய ஒன்றிய அரசுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்

 

டெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை நீக்கிவிட்டு புதிய திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு தழுவிய போராட்டம் நடத்துவது குறித்து காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மிக முக்கியமான திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை, ‘விக்சித் பாரத் ரோஸ்கர் மற்றும் அஜீவிகா மிஷன்’ என்ற பெயரில் புதிய சட்டமாக மாற்றப்போவதாக ஒன்றிய அரசு அண்மையில் அறிவித்திருந்தது. 100 நாள் வேலைத் திட்டம் என்று மக்களால் பரவலாக அறியப்படும் இத்திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கையானது, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்தும், வரும் 2026ம் ஆண்டு அசாம், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம் அமைப்பது குறித்தும் விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான இந்திரா பவனில் இன்று மிக முக்கியமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தி மற்றும் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், ஒன்றிய அரசின் புதிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு தழுவிய அளவில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கையில், ‘ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்திட்டத்தின் பெயரை மாற்றி, அதன் கட்டமைப்பைச் சிதைக்கும் பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் முடிவை எதிர்த்து மக்கள் மன்றத்தில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்’ என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: