- போர்ட் சட்டமன்றத் தொகுதி
- அமைச்சர்
- சேகர்பாபு
- சென்னை
- துறைமுக
- சட்டமன்ற தொகுதி
- ராயபுரம் மண்டலம்
- வார்டு-57
- வால்டாக்ஸ் சாலை, விஓசி சாலை
சென்னை: துறைமுகம் சட்டமன்ற தொகுதி, ராயபுரம் மண்டலம், வார்டு-57, வால்டாக்ஸ் ரோடு, வ.உ.சி. சாலையில் மாநகராட்சி சார்பில் ரூ.13.43 கோடியில் குளிர்சாதன வசதி மற்றும் வாகன நிறுத்தம் வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடம் பணி மற்றும் ரூ.1.4 கோடியில் 4 வகுப்பறைகளுடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டிடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, வார்டு-54, அம்மன் கோயில் தெருவில், மாநகராட்சி சார்பில் ரூ.3.6 கோடியில் 10 வகுப்பறைகள் மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் புதிய பள்ளிக் கட்டிடம் மற்றும் முதல்வர் படைப்பகத்தை அமைச்சர் சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், வடமலை தெருவில் தற்போது பயன்பாட்டில் இல்லாத பல்நோக்கு மைய கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இதர அரசு துறைகளின் பயன்பாட்டிற்கு வழங்குவது தொடர்பாக உரிய வழிகாட்டுதல்களை மாநகராட்சி அலுவலர்களுக்கு எடுத்துரைத்தார்.
மேலும், வார்டு-55, போர்ச்சுகீஸ் சர்ச் சாலையில், ரூ.1.8 கோடியில் 5 வகுப்பறைகள் மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் கூடுதல் பள்ளிக் கட்டத்தினையும் மற்றும் வார்டு-54, அம்மன் கோயில் தெருவில், ரூ.1.2 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
பின்னர், வார்டு-59, சத்தியவாணி முத்து நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் உடற்பயிற்சி கூட கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, உடற்பயிற்சி கூடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து கொண்டுவரவும், உரிய பயிற்சி பெற்ற உடற்பயிற்சியாளர்களை நியமித்திடவும் மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் அடிப்படை தேவைகள் வசதிகள் குறித்து கலந்துரையாடினார். இந்த ஆய்வுகளின்போது, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மண்டல குழுத் தலைவர் ஸ்ரீராமுலு மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
