ஆலந்தூர்: ஆலந்தூர் 162வது வார்டுக்கு உட்பட்ட நங்கநல்லூர் மாநகராட்சி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் நடந்தது. இதனை, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களின் விவரங்களை சரிபார்க்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
வாக்காளர் வரைவு பட்டியலில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. புதிதாக பெறப்பட்ட புகைப்படங்கள் புதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. பழைய புகைப்படங்களே உள்ளது. சந்தேகத்திற்குரியவர்கள் என கூறப்பட்டவர்களுக்கு இதுவரை நோட்டீஸ் வழங்கப்படவில்லை. யார் யாருக்கு நோட்டீஸ் வழங்குவார்கள் என்றும் தெரியவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாள் சிறப்பு முகாம் நடக்கிறது.
இது போன்ற குளறுபடிகள் ஏற்படும் என்பதால் தான் எஸ்.ஐ.ஆர் பணியை தற்போது வேண்டாம் என்று திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அவசர கோலத்தில் செய்யப்பட்டதால் தான் இவ்வளவு பெயர் விடுப்பட்டு உள்ளது. நானே புதியதாக புகைப்படம் கொடுத்தும் வரைவு பட்டியலில் என்னுடைய புகைப்படம் இடம்பெறவில்லை. பழைய புகைப்படம் தான் வந்து உள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்களை நிவர்த்தி செய்ய வேண்டும். இல்லை என்றால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
