சென்னை: இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, சென்னை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் 19.12.2025 அன்று வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் 19.12.2025 முதல் 18.1.2026 வரை நடைபெறும்.
ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் காலத்தில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 27 (நேற்று), 28, ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான 4,079 வாக்குச்சாவடிகளிலும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மேற்கொள்ளுதல் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது.
சென்னை மாவட்ட சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் பார்வையாளர் கிறிஸ்துராஜ், எழும்பூர் சட்டமன்ற தொகுதி, சுந்தரம் தெருவில் உள்ள சென்னை நடுநிலை பள்ளி, டிமலஸ் சாலையில் உள்ள இந்து ஒற்றுமைக் கழக நடுநிலைப் பள்ளி மற்றும் ஷெனாய் நகர், சுப்புராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு தீவிரத் திருத்த பணிக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதேபோல், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் குமாரவேல் பாண்டியன் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி, கே.கே.நகர், பி.வி.ராஜாமன்னார் சாலையில் உள்ள தாய் சத்யா மெட்ரிகுலேஷன் பள்ளி, அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதி, ரயில்வே காலனி 3வது தெருவில் உள்ள வின்சன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் தி.நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்த பணிக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
