திண்டிவனம்: சேலத்தில் நாளை (29ம் தேதி) பாமக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். இதில் தேர்தல் கூட்டணி உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு தடைபோட பாமக அன்புமணி தரப்பு மேற்கொள்வதாக தகவல் வெளியாவதால் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் இருந்தபடி பாமக நிறுவனரான ராமதாஸ் பாமக பொதுக்குழுவில் கலந்து கொள்ள நிர்வாகிகளுக்கு உருக்கத்துடன் அழைப்பு விடுத்து காணொலி காட்சி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: என் உயிரை விட மேலான பாட்டாளி சொந்தங்களே, என் மக்களே, இன்னைக்கு உங்ககிட்ட பேச போறேன். எனக்கு என் தொண்டை அடைக்கிறது.
ஆனால் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் எனக்கு. இப்போது நடக்கின்ற சண்டையை, குடும்ப சண்டையாக பார்க்காதீர்கள். இது ஈகோ சண்டை இல்லை, இது கோபம் இல்லை. இது நான் பெற்றெடுத்த ஒரு இயக்கத்தை, ஆன்மாவை மீட்க நடைபெறும் ஒரு போர். இன்று என் கண்முன்னால் இந்த கட்சி பலவீனமா நிக்கறப்போ பெத்த வயிறு பத்தி எரியுது, உண்மைதான். என் மகன் அன்புமணியை நம்பினேன், அது நான் செய்த மிகப்பெரிய தவறு.
சேர்ந்து நின்று இந்த இயக்கத்தை காப்பாற்றுவான் என்று எண்ணினேன், அவனை நல்ல தலைவராக செதுக்கலாம் என்று பார்த்தேன். ஆனால் இன்றைக்கு ஒரு கசப்பான உண்மை புரியுது. சிலைகளைதான் செதுக்க முடியும் தவிர, சில பேரை செதுக்கவே முடியாது, மாற்றவே முடியாது. தலைமை என்பது அப்பன் வீட்டு சொத்து மாறி வாரிசா வர்றது இல்லை, அது உழைப்பால், தியாகத்தால வர வேண்டும். மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள், அன்புமணிக்கு நான் என்ன வாய்ப்பு கொடுக்கவில்லை.
எம்பி பதவி, மத்திய மந்திரி பதவி, தேர்தலில் தோற்ற பிறகும் ராஜ்யசபா எம்பி பதவி என்று எல்லாவற்றையும் கொடுத்தோம். ஆனால் பொறுப்பு வந்தால் மட்டும் போதாது, பொறுப்புணர்ச்சியும் வேண்டும். ஒருவரை நம்பி பொறுப்பு ஒப்படைத்தால் மக்களுக்காக உழைக்கணும், ஆனால் அவர் வீட்டில் உட்கார்ந்து என்ன பண்ணுவார். எம்பி பதவியை எப்படி வீணடித்தாரோ, கட்சியிலும் 1,008 உதாரணங்கள் இருக்கின்றது. ஒழுங்காக களப்பணி ஆற்றவில்லை, தொண்டர்களை சந்திக்கவில்லை, இது தான் உழைப்பா, இல்லை இதான் மிதப்பா.
ஒருகாலத்தில் 20 எம்எல்ஏக்கள் இந்த கட்சியில் இருந்தார்கள். இன்னைக்கு அங்கீகாரத்தை இழந்து நிற்கின்றது, ஏன் தெரியுமா?. உழைக்க வேண்டிய காலத்தில் உரிமை கொண்டாடிட்டு இருந்தோம். என்னை ஏமாற்றியவர்களை நான் மன்னிப்பேன் ஆனால் என்னை நம்பி வந்த லட்சக்கணக்கான தொண்டர்களை ஏமாற்றினால் நான் விடமாட்டேன். டிசம்பர் 29, சேலத்தில் கூடுகின்ற பொதுக்குழு சாதாரணமான கூட்டம் இல்லை. அது பாமகவின் மறுபிறப்பு.
வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றிபெற்று நம்முடைய கட்சியோட சின்னத்தை மீட்க வேண்டும். நாம இழந்த கட்சியோட அங்கீகாரத்தை மீட்டெடுக்க வேண்டும். கட்சியை மறுபடியும் மக்களுக்கான கட்சியாக மாற்றுவதற்காக போராட்டம் இது. அன்புமணி பக்கம் இருக்கின்ற தொண்டர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். தந்திரங்களுக்கு ஏமாந்து விடாதீர்கள், ஒரே ஒரு கேள்வி உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். பெத்த அப்பனுக்கே துரோகம் செய்கிறவன் நாளைக்கு இந்த இயக்கத்தையும், மக்களையும் காப்பாற்றுவாரா?. எல்லோரும் சேலத்திற்கு வர வேண்டும்.
ஒருத்தர்கூட விடுபடக்கூடாது, நாம் எல்லோரும் கைகோர்த்தால் இந்த ஆலமரம் நிமிர்ந்து நிற்கும். உங்களுக்காக நான் சேலத்துக்கு வருகிறேன். நான் நம்பிய சிலர் என்னை ஏமாற்றினாலும், என் மக்கள் எனக்காக வருவீங்க … என்னுடன் நிற்பீர்கள்… என்று நம்புகிறேன். அன்பும் உழைப்பும் என்றும் வெல்லும்… நாடகம் சோம்பேறித்தனமும் என்றைக்கும் தோற்கும்… சேலத்தில் நாம் சந்திப்போம், உங்கள் ஐயா நான் கூப்பிடுகிறேன், கட்டாயம் வந்து விடுங்கள். இவ்வாறு அதில் பேசியுள்ளார்.
* மனசு வலிக்குது அவமானமா இருக்கு
ராமதாஸின் காணொலியில், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்ற மாதிரி அன்புமணி தன்னுடைய பொறுப்பை பயன்படுத்தாதது குறித்து ஒரு உதாரணம் சொல்லுகின்றேன்… நாடாளுமன்ற கணக்கு படி நேஷனல் வருகை பதிவில் மற்ற எம்.பிக்களின் வருகை 79% இருக்கும்போது அன்புமணி வருகை பதிவு 30% தான், பாதிகூட இல்லை. அதே போல விவாதங்கள் நடைபெறும்போது சராசரியாக ஒரு எம்பி 79 விவாதங்களில் பங்கு பெற்றுள்ளனர். அன்புமணி வெறும் ஏழு தான். எனக்கு இதெல்லாம் பார்க்கும் போது மனசு தான் வலிக்குது, அவமானமாக இருக்கிறது, என தெரிவித்துள்ளார்.
* எம்பி பதவியை அன்புமணி எப்படி வீணடித்தாரோ, கட்சியிலும் அப்படித்தான். அதற்கு 1,008 உதாரணங்கள் இருக்கின்றது. ஒழுங்காக களப்பணி ஆற்றவில்லை, தொண்டர்களை சந்திக்கவில்லை, இது தான் உழைப்பா, இல்லை இதான் மிதப்பா.
