×

8 பேரை திருமணம் செய்து 19 வயது இளம்பெண் மோசடி: நகை, பணத்துடன் மாயம்

 

திருமலை: அத்தையுடன் சேர்ந்து 8 பேரை திருமணம் செய்து நகை, பணத்துடன் மாயமான இளம்பெண்ணையும், அவரது அத்தையையும் போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் காகுளம் மாவட்டம் இச்சாபுரம் நகரில் உள்ள கர்ஜி தெருவை சேர்ந்தவர் வாணி(19). இவரது சிறு வயதிலேயே பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் இவரை அவரது தாய்வழி அத்தையான சந்தியா வளர்த்து வந்துள்ளார். வாணிக்கும், கர்நாடகாவை சேர்ந்த ஒருவருக்கும், காகுளம் மாவட்டம் சோம்பேட்டில் உள்ள துர்காதேவி கோயிலில் சில வாரங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் வாணியை, அவரது கணவர் கர்நாடகாவில் உள்ள தனது வீட்டிற்கு ரயிலில் அழைத்துச்சென்றார். வழியில் விஜயநகரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. அப்போது, கழிவறைக்கு செல்வதாக வாணி கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் ரயில் புறப்பட்டபிறகும் வாணி திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த புதுமாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோர் ரயிலில் இருந்து இறங்கி வாணியை தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் இச்சாபுரத்தில் உள்ள வாணியின் அத்தை சந்தியா வீட்டிற்கு சென்றனர். அங்கு சந்தியா வீட்டில் வாணி இருந்தார்.

அவரிடம் விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சியான தகவல்கள் வெளியானது. அவர் பணத்திற்காக திருமணம் செய்து கொண்டதாக தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் தரப்பினர், திருமணத்தின்போது கொடுத்த சுமார் ரூ.1.5 லட்சத்தை கேட்டனர். பணத்தை தருவதாக கூறிய சந்தியாவும் வாணியும், மணமகன், குடும்பத்தினரை அங்கேயே தங்கும்படி கூறினர். மறுநாள் காலை பார்த்தபோது, வாணி, சந்தியாவை காணவில்லை. அவர்கள் இரவோடு இரவாக தலைமறைவானது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் இச்சாபுரம் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சந்தியாவின் தூண்டுதலின்பேரில் வாணி, பலரை திருமணம் செய்து ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது தெரியவந்தது. குறிப்பாக திருமணம் செய்து கொள்வதாக மாப்பிள்ளை வீட்டாரை நம்ப வைத்து அவர்களிடமிருந்து எதிர் வரதட்சணையாக வாங்கி, திருமணத்திற்குத் தயாராகி, பின்னர் திருமணம் செய்து கொண்டு நகை, பணத்துடன் தலைமறைவாகிவிடுவதும் தெரியவந்தது.

அதன்படி கர்நாடகாவை சேர்ந்தவர் உள்பட 8 பேரை வாணி திருமணம் செய்து நகை, பணத்துடன் தலைமறைவானதும் தெரியவந்தது. வாணியால் ஏமாற்றப்பட்ட பலரும் வாணி இதற்கு முன்பு மைனர் பெண் என்பதால் புகார் அளிக்கவில்லை. ஆனால் தற்போது 18 வயது நிறைவு பெற்று 19 வயது ஆன நிலையில் வாணியால் திருமணம் செய்யப்பட்டு ஏமாந்த நாகிரெட்டி மற்றும் கேசவ ரெட்டி ஆகியோர் இச்சாபுரம் போலீசில் நேற்று புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள வாணி, சந்தியாவை தேடி வருகின்றனர்.

Tags : Tirumala ,Vani ,Karji Street ,Ichapuram town, Kakulam district, Andhra Pradesh ,
× RELATED மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா மாநில...