×

20 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த அரசு பங்களாவை இரவோடு இரவாக காலி செய்த மாஜி முதல்வர்கள் : பீகார் அரசியலில் பரபரப்பு

 

தற்போது சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவராக ரப்ரி தேவி இருப்பதால், அவருக்கு 39 ஹார்டிங் சாலையில் சிறிய பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், பாட்னாவின் மகுவாபாக் பகுதியில் கட்டப்பட்டு வரும் தனிப்பட்ட வீட்டிற்கே அவர்கள் செல்லத் திட்டமிட்டுள்ளனர்.

பாட்னா: பீகார் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவி, அரசு உத்தரவுப்படி தனது அதிகாரப்பூர்வ பங்களாவை காலி செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளார். பீகாரில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கடந்த நவம்பர் 25ம் தேதி பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் முன்னாள் முதல்வருமான ரப்ரி தேவியின் குடும்பத்தினர் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் அதிகார மையமாகத் திகழ்ந்த பாட்னா 10 சர்க்குலர் சாலை பங்களாவை வீட்டை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த பங்களாவில் இந்த குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர். முன்னாள் முதல்வர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அரசு பங்களா கிடையாது என்ற 2019ம் ஆண்டு உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் லாலுவுக்கும், ரப்ரிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும், லாலுவின் மகன் தேஜ் பிரதாப் யாதவிற்கும் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவை ஏற்று ரப்ரி தேவி தரப்பினர் வீட்டை காலி செய்யும் பணியில் இரவோடிரவாக இறங்கியுள்ளனர். கடந்த 25 மற்றும் 26ம் தேதிகளில் லாரிகள் மூலம் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் செடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. மார்கழி மாதம் முடிவடைந்த பிறகு, வரும் ஜனவரி 14ம் தேதிக்குப் பின் குடும்பத்தினர் முழுமையாகப் புதிய வீட்டிற்குச் குடியேறுவார்கள் எனத் தெரிகிறது. தற்போது சட்டமேலவை எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் ரப்ரி தேவிக்கு 39 ஹார்டிங் சாலையில் சிறிய பங்களா ஒதுக்கப்பட்டிருந்தாலும், பாட்னாவின் மகுவாபாக் பகுதியில் கட்டப்பட்டு வரும் தனிப்பட்ட வீட்டிற்கே அவர்கள் செல்லத் திட்டமிட்டுள்ள கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தேஜ் பிரதாபுக்கு கொலை மிரட்டல்
லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியிலிருந்து 6 ஆண்டுகள் நீக்கப்பட்ட பிறகு, கடந்த சில மாதங்களுக்கு முன் ஜனசக்தி ஜனதா தளம் (ஜேஜேடி) என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடந்து முடிந்த தேர்தலில் மஹுவா தொகுதியில் போட்டியிட்ட தோற்றார். இதற்கிடையே கட்சியின் கொள்கைக்கு விரோதமாகப் பொதுமக்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்த புகாரின் பேரில், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சந்தோஷ் ரேணு யாதவ் கடந்த 14ம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தோஷ் ரேணு யாதவ் சமூக வலைதளங்களில் நேரலையில் வந்து ஆபாசமாகப் பேசுவதுடன் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி, பீகார் துணை முதல்வரும் உள்துறை அமைச்சருமான சாம்ராட் சவுத்ரிக்கு தேஜ் பிரதாப் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘சந்தோஷ் ரேணு யாதவ் என் உயிருக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகிறார்; எனவே எனது பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இது தொடர்பாகப் பாட்னா செயலக காவல் நிலையத்திலும் முறைப்படி புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Maji ,Chiefs ,Bihar ,Rabri Devi ,Legislative Opposition ,39 Harding Road ,Maguabakh ,Patna ,Former Chief Minister ,
× RELATED திருவண்ணாமலையில் சாலை விபத்தில்...