பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கர்லம்பாக்கம் காலனியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணற்றில் இருந்து பைப்லைன்கள் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், இக்கிராமத்தை சேர்ந்த கட்டிட மேஸ்திரி ஏழுமலை (55) என்பவர் நேற்றிரவு திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக இறந்தார். மேலும் அதே கிராமத்தை சேர்ந்த வரதன் என்பவரின் மனைவி சுதா (40) என்பவரும் இன்று காலையில் வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவர்கள் தவிர, 10க்கும் மேற்பட்டோருக்கு இன்று காலையில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. உடனே அவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பைப்லைனில் வரும் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் 2 பேர் பலியானதாகவும், 10 பேர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் பரவியது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர், இன்று காலை பள்ளிப்பட்டு-ஆர்.கே.பேட்டை மாநில நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 3 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து பள்ளிப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பைப்லைனின் கழிவுநீருடன் கலந்த குடிநீர் வருவதால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். எனவே உரிய நடவடிக்கை எடுத்தால்தான் கலைந்து செல்வோம்’ என்று மக்கள் கூறினர். உடனடியாக இதுபற்றி நடவடிக்கை எடுக்கிறோம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில், வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவ குழுவினர், கிராமத்துக்கு வந்து முகாமிட்டு, அப்பகுதி மக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், இக்கிராமத்தில் பைப்லைனில் கழிவுநீருடன் வரும் குடிநீர் குறித்து கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.
