×

தொடர் விடுமுறை கொண்டாட்டம் ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

ஏற்காடு : தொடர் விடுமுறையையொட்டி ஏற்காடு மற்றும் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்தினருடன் பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர்.

கிறிஸ்மஸ் மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையை கொண்டாட, சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான ஏற்காட்டிற்கு, நேற்று சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.

பஸ்கள், கார்கள், வேன், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் வந்ததால், ஏற்காடு மலைப்பாதை மற்றும் ஏற்காட்டில் உள்ள சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்காட்டில் உள்ள சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ஏரித்தோட்டம், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் உள்ளிட்ட பூங்காக்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

மேலும், காட்சிமுனை பகுதிகளான கரடியூர், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட் ஆகிய இடங்களிலும் திரண்ட சுற்றுலா பயணிகள், மலைகளின் மீது படர்ந்திருந்த மலை மேக கூட்டங்களின் அழகை கண்டு ரசித்ததுடன், புகைப்படம் எடுத்து கொண்டனர்.

ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்வதற்காக, நீண்ட நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனர். ஏற்காட்டில் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் சுற்றுலா பயணிகளுக்கு உற்சாகமடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருந்ததால், தங்கும் விடுதிகள், உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்கள் விறுவிறுப்பாக நடந்தது.

இதே போல், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு உள்ளிட்ட இடங்களிலிருந்தும், அண்டைய மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தொடர் விடுமுறைறையொட்டி, நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது.

காவிரியில் உற்சாகமாக பரிசல் சவாரி செய்த சுற்றுலா பயணிகள், அங்குள்ள மெயினருவியில் குளித்து மகிழ்ந்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் குளித்தனர். மேலும், அங்குள்ள கடைகளில் மீன் உணவை சுவைத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஒகேனக்கல் போலீசாருடன் இணைந்து ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இடைப்பாடி: பூலாம்பட்டி நெரிஞ்சிப்பேட்டை நீர்மின் கதவணையில், விசைப்படகு போக்குவரத்து நடந்து வருகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி, வெளிமாநிலம், மாவட்ட பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், விசைப்படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மேலும் இங்குள்ள படித்துறை மற்றும் கைலாசநாதர் கோயில், மூலப்பாறை பெருமாள் கோயில், மாட்டுக்காரர் பெருமாள் கோயில், கோயில்பாளையம் பெருமாள் கோயில், கதவணைப்பாலம் வயல்வெளி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. இதையொட்டி, பூலாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேட்டூர்: மேட்டூருக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், டெல்டா கால்வாயில் நீராடி மகிழ்ந்தனர். பின்னர், அணையின் காவல் தெய்வமான முனியப்பனை தரிசனம் செய்து, அங்குள்ள கடைகளில் மீன் உணவுகளை சாப்பிட்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து, அங்குள்ள அணை பூங்காவில் குழந்தைகளுடன் உற்சாகமாக விளையாடி பொழுதை போக்கினர்.

Tags : Okanakal ,YEARAD ,OKENAKAL ,Christmas ,Tamil Nadu ,
× RELATED திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சி,...