×

இன்று சுனாமி நினைவு தினம்: தூத்துக்குடி கடலில் மலர்தூவி அஞ்சலி

 

தூத்துக்குடி: தூத்துக்குடியில் சுனாமி பாதித்த 21ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் இன்று கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம்தேதி சுனாமி பேரலை தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 3 பேரும், சுற்றுலா சென்ற இடத்தில் தூத்துக்குடியை சேர்ந்த 9 பேரும் பலியாகினர். இவை தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் 19,615 குடும்பங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டன. தூத்துக்குடி தாலுகாவில் 634 வீடுகளும், சாத்தான்குளத்தில் 5 வீடுகளும், திருச்செந்தூரில் 83 வீடுகளும், விளாத்திகுளத்தில் 13 வீடுகளும் சேதமடைந்தன. மேலும் மாவட்டத்தில் 638 கட்டுமரங்கள், நாட்டுப்படகுகளும் சேதமடைந்தன.

இந்த பெரும் இயற்கை சீற்றத்தை ஏற்படுத்திய சுனாமி பாதிப்பின் 21ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனி, திரேஸ்புரம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடலில் மலர்தூவியும், பால் ஊற்றியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பொதுமக்கள், மீனவர்கள், பங்குத்தந்தையர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

Tags : Tsunami Memorial Day ,Thoothukudi ,tsunami ,Thoothukudi district ,
× RELATED தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர்...