பண்டிகைக் கால இனிப்புகள் கிட்னியை பாதிக்கும்!

நன்றி குங்குமம் தோழி

தீபாவளியை தொடர்ந்து பொங்கல் வரை அடுத்தடுத்து பண்டிகைகளுக்கு பஞ்சமே இல்லை. நாமும் பண்டிகை நாள் தானே என்று அன்று மட்டும் இனிப்புகளை கணக்கில்லாமல் சாப்பிட்டு விடுவோம். ஆனால், அந்த ஒரு நாள் நாம் சாப்பிடும் இனிப்புகள் குறிப்பாக நீரிழிவு பிரச்னை உள்ளவர்களை பெரிய அளவில் பாதிக்கும் என்கிறார் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் நவிநாத்.‘‘அளவுக்கு அதிகமாக இனிப்புகளை சாப்பிடும் போது குறிப்பா நீரிழிவு பிரச்னையுள்ளவர்களுக்கு கிட்னி ஸ்ட்ரெயின் ஏற்பட வாய்ப்புள்ளது. சர்க்கரை அதிகமாக எடுப்பதால் அது நேரடியாக சிறுநீரகத்தை பாதிக்காது. ஆனால், நோயாளிகள் உடல் பருமன், சர்க்கரை நோய் மட்டுமில்லாமல் அவர்களின் மெட்டபாலிசமும் பாதிப்படையும்.

ஏற்கனவே டயபெட்டிக் பிரச்னை உள்ளவர்கள் அதிகளவு எனர்ஜி தரக்கூடிய சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் முன் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். காரணம், சர்க்கரையின் அளவு அதிகமாகும் போது சிறுநீரகத்தில் உள்ள நெஃப்ரான்கள் பாதிக்கப்பட்டு சிறுநீரகத்தில் புரதக்கசிவு ஏற்படுவதால், விளைவு சிறுநீரகத்தையே பாதிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிடும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் பண்டிகை நாள் மட்டும் சிறிய அளவில் இனிப்பு சாப்பிட்டால் ஒன்றும் செய்து விடாது என்று நினைக்கிறார்கள். சர்க்கரை அளவினை கன்ட்ரோலில் வைத்திருப்பவர்கள் இந்த சலுகையை மேற்கொள்ளலாம். ஆனால், அவர்கள் தொடர்ந்து அதிகமாக இனிப்பு உணவுகளை சாப்பிட்டு வந்தால் கடைசியில் சிறுநீரகம் மட்டுமில்லாமல், கண் நோய் மற்றும் இதயத்தையும் பாதிக்கும்.

இது நாம் சாப்பிடும் இனிப்புகள் குறித்து மட்டுமில்லை, சில இனிப்பு உணவுகள் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்கிறார்கள். அதாவது, ஸ்வீட் கடைகளில் அன்றாடம் செய்யும் இனிப்புகள் அல்லாமல் சில இனிப்புகள் சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் பாக்கெட் வடிவத்தில் விற்பனை செய்யப்படும். அதில் ப்ரிசர்வேடிவ்கள் சேர்க்கப்பட்டிருக்கும். அதில் பாஸ்பேட் அதிகமாக இருக்கும். அதே போல் பாட்டிலில் விற்கப்படும் கூல்ட்ரிங்க்ஸ் போன்றவற்றிலும் அதிகளவு இனிப்பு இருக்கும். அதுவுமே நம் உடல் நலத்ைத பாதிக்கும். சில வகை இனிப்புகளில் அதிகளவு உலர் விதைகள் மற்றும் சாக்லேட்கள் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

அதில் பொட்டாசியம் அதிகளவில் இருக்கும். இதுவும் சிறுநீரகத்தை பாதிக்கும்.நாம் சாப்பிடும் உணவில் உள்ள பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் சிறுநீரகம் வழியாக சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறது. ஆனால், இவை அதிகம் உள்ள உணவுகளை சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடும் போது அது மேலும் அவர்களின் பிரச்னையை அதிகரிக்குமே தவிர குறைக்காது.

இனிப்பு உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதே சமயம் நம் உடல் நிலையை புரிந்து கொண்டு அதை குறைவாக எடுத்துக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். கடைகளில் விற்பனை செய்யப்படும் பாக்கெட் இனிப்புகளை தவிர்த்து வீட்டில் செய்யப்படும் இனிப்புகளை சாப்பிடலாம்.

முடிந்த வரை உலர்ந்த விதைகள் மற்றும் பால் சார்ந்த இனிப்புகளை தவிர்க்கலாம். பைபர் நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொண்டால் அது சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும். முக்கியமாக சோடா மற்றும் கார்பனேட்டெட் குளிர்பானங்களை எடுக்கவே கூடாது. அதற்கு பதில் உப்பு குறைவாக சேர்க்கப்பட்ட மோர் குடிக்கலாம். உப்பு மற்றும் காரம் அதிகமாக சேர்க்கும் போது அது ரத்த அழுத்தத்தை அதிகரித்து மற்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

இதெல்லாம் சாப்பிடும் போது சர்க்கரை நோயாளிகள் அவர்களே தங்களின் சர்க்கரையின் அளவினை தெரிந்து கொண்டு அதை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம். அதற்கு சுகர் பேட்ச் உள்ளது. இதை நம்முடைய கைப் பகுதியில் ஒட்டிக் கொள்ள வேண்டும். அதன் மூலம் நாம் சாப்பிடும் உணவில் உள்ள சர்க்கரையின் அளவினை தெரிந்து கொள்ளலாம். சில உணவுகளை சாப்பிடும் போது சர்க்கரை அளவு உயர்வதை அவர்கள் கண்கூடாக பார்க்கும் போது, அவர்களுக்கே அது பற்றி புரிதல் வருகிறது.

உணவில் கட்டுப்பாட்டினை பின்பற்ற துவங்குகிறார்கள். எந்தப் பிரச்னையும் இல்லாதவர்களுக்கு இனிப்பு உணவுகளால் பிரச்னை ஏற்படாது என்று உறுதியாக சொல்ல முடியாது. அவர்களுக்கு உடற்பருமன் பிரச்னை ஏற்படும். நாளடைவில் அவர்களும் இந்தப் பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. வயதானவர்கள், சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக இனிப்புகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய உணவுப் பழக்கங்களை பின்பற்றினால் பிரச்னையும் குறையும்.

பொதுவாக சர்க்கரை பிரச்னை உள்ளவர்களுக்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இருப்பதில்லை. நாற்பது வயதில் சர்க்கரை நோயினை கண்டுபிடித்தாலும், அவர்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். அதுவே அவர்கள் 50 வயதினை நெருங்கும் போது கண் பார்வை, இதய பாதிப்பு, நரம்பு பிரச்னை என ஒவ்வொரு பிரச்னையும் ஏற்படும். அந்த சமயத்தில் சிகிச்சை மேற்கொண்டால் பாதிக்கப்பட்ட உறுப்புகளை மீட்க முடியாது. ஒருமுறை சர்க்கரையினை கண்டறிந்துவிட்டாலே அதற்கான சிகிச்சையினை மேற்கொள்வது நல்லது.

அடுத்து நாட்டுச்சர்க்கரை சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று மக்கள் நினைக்கிறார்கள். இதுவும் சர்க்கரைதான். இதை இரண்டு ஸ்பூன் போட்டாலும் அதே எபெக்ட்தான் தரும். சர்க்கரையோ உப்போ எதுவாக இருந்தாலும் அதை அளவோடு அல்லது தவிர்ப்பது நல்லது. உணவில் உப்பு அளவினை குறைத்துக் கொண்டு ஸ்நாக்ஸ் மற்றும் ஊறுகாயினை அதிகம் சாப்பிடுவார்கள். இதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

நாற்பது வயதினை கடக்கும் போது ஒவ்வொருவரும் தங்களை முழுமையாக மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்த நோய்கள் எந்த ஒரு அறிகுறிகளையும் ெகாடுக்காது. அதனால் ஆரம்ப நிலையிலேயே நோயின் தன்மையை தெரிந்து கொண்டால், சிகிச்சை மூலம் பாதுகாத்துக் கொள்வதும் எளிது’’ என்று ஆலோசனை வழங்கினார் டாக்டர் நவிநாத்.

தொகுப்பு: நிஷா

Related Stories: