நலம் தரும் நாட்டுச்சர்க்கரை!

நன்றி குங்குமம் டாக்டர்

கரும்புச்சாறு பாகாகக் காய்ச்சப்பட்டு அவை குறிப்பிட்ட கொதிநிலைபடும்போது அதன் சத்துக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று மாற்றம் அடைந்து பின்னர் பிரவுன் நிறத்தில் கிடைப்பதே நாட்டுச்சர்க்கரையாகும். இந்த நாட்டுச்சர்க்கரையில் வெல்லத்தைக் காட்டிலும் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய அனைத்து சத்துகளும் உள்ளன. மேலும் அது உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்றும் செயலை செய்கிறது. நாட்டுச்சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் நீங்கி சுத்தமாகிறது. மேலும் நாட்டுச் சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

இனிப்பு உணவுகள் மலச்சிக்கலை உருவாக்கும் என்பர். நாட்டுச்சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்தினால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை
ஏற்படாமல் பாதுகாக்கும். வெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டு பண்ணும். நமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமித் தொற்றையும் தடுத்து, நோய் ஏற்படாமல் காத்து, நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவூட்டும் வேலையை நாட்டுசர்க்கரை செய்யும். உணவுப் பொருட்களில் உள்ள தீய ரசாயனத் தன்மையை முறிக்கும் தன்மை நாட்டுச்சர்க்கரைக்கு உள்ளதால் புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்கவும், நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நாட்டுச்சர்க்கரை உதவுகிறது.

நாட்டுச்சர்க்கரையின் முக்கிய பயன்கள்

ஆற்றல் அதிகரிப்பு: வெள்ளை சர்க்கரையுடன் ஒப்பிடும்போது, நாட்டு சர்க்கரை கலோரிகளின்றி ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.

ரத்த சுத்திகரிப்பு: ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை நாட்டுச் சர்க்கரைக்கு உண்டு.

செரிமான மேம்பாடு: இது செரிமான நொதிகளை செயல்படுத்துகிறது. மேலும் குடல் இயக்கங்களைத் தூண்டி மலச்சிக்கலைத் தடுக்கிறது.

காய்ச்சல் மற்றும் சளி நிவாரணம்: வெந்நீரில் நாட்டுச் சர்க்கரை, சுக்கு, மிளகு சேர்த்து கஷாயமாக அருந்துவது இருமல், காய்ச்சல் மற்றும் சளியைக் குறைக்கும்.

கழிவுகளை வெளியேற்றும்: உடலில் தேங்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

வாத நோய்களைக் குணப்படுத்தும்: வாதம் தொடர்பான நோய்களை குணப்படுத்தும் தன்மை நாட்டுச் சர்க்கரைக்கு உண்டு.

தொகுப்பு: மகாலட்சுமி சுப்ரமணியன்

Related Stories: