வாழ்வில் வளம் தரும் லக்ன கோயில்கள்!

நாம் நட்சத்திரங்களையும் ராசிகளையும் அறிவோம். ‘‘உங்களின் ராசி என்ன?’’ என்று கேட்டால் எல்லோரும் சட்டென்று சொல்லி விடுவோம். ஆனால், ‘‘உங்களின் லக்னம் என்ன?’’ என்று கேட்டால் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ஜோதிடர் ராசிக் கட்டத்தை நோக்கும்போது லக்னம் என்ன என்றுதான் பார்ப்பார். ஜாதகக் கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்தான் லக்னம். உங்களின் மையச் சக்தி குவிந்திருக்கும் ராசியையே லக்னம் என்று வரையறுத்திருக்கிறார்கள். இந்த உலகத்தை நீங்கள் எந்த ராசியின் வழியாக, அதன் அதிபதியான எந்த கிரகத்தின் மூலம் சந்திக்கிறீர்கள் என்பதைத்தான் லக்னம் என்கிறார்கள். ராசி என்பது, சந்திரன் எந்த கிரக வீட்டில் இருந்தபோது நீங்கள் பிறந்தீர்கள் என்று சொல்வது. ஆனால், லக்னம் என்பது நீங்கள் எந்த மையத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்க்கையை எந்த மையம் நகர்த்துகிறது என்றும் தீர்மானிக்கிறது. மரத்தின் ஆணிவேர் போல மனிதனுக்கு லக்னம். உடலுக்கு உயிர்போல என்பதாலேயே, விதியாகிய லக்னம் மதியாகிய சந்திரன் கதியாகிய சூரியன் என்பார்கள்.

மேஷ லக்னம்

கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் நீங்கள் செல்ல வேண்டியது, திருச்சி மலைக் கோட்டையிலுள்ள தாயுமானவசுவாமி ஆலயமாகும். அத்தலத்தில் உறையும் தாயுமானவ சுவாமியையும் மட்டுவார்குழலி அம்மையையும் தரிசித்து வாருங்கள்.

ரிஷப லக்னம்

உங்களுக்கு நல்ல நேரமோ கெட்ட நேரமோ எது நடந்தாலும், நன்மை விளையச் செய்வது என்பது இறைவன் கைகளில்தான் உள்ளது. அதிலும் இயல்பாகவே சுகவாசியான நீங்கள், இன்னும் சுகமான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் திட்டக்குடி எனும் தலத்திலுள்ள சுகாசனப் பெருமாளையும், வேதவல்லித் தாயாரையும் முடிந்தபோதெல்லாம் தரிசியுங்கள். சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழுதூரிலிருந்து 13 கி.மீ., விருத்தாசலத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது.

மிதுன லக்னம்

எல்லாவற்றையும் தாண்டி கிரகங்களை சரி செய்யும் ஆற்றலும், திறனும் இறைவனிடமே இருப்பதால், இறுதியில் கிரகங்கள் இறைவனிடமே சரணடைகின்றன. எனவே, நம்மால் ஆன பரிகாரங்களை செய்து கொண்டிருக்கும்போதே இறைவனின் பாதங்களை நினைத்து சரணடைவோம். அப்படி நீங்கள் தரிசிக்க வேண்டிய தெய்வம், நின்ற நாராயணப் பெருமாளும், செங்கமலத் தாயாரும் ஆகும். இத்தலம், சிவகாசி – வில்லிபுத்தூர் பாதையில் அமைந்துள்ளது.

கடக லக்னம்

கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை அமைவதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம், அம்மன்குடி ஆகும். இத்தலத்திலுள்ள அஷ்டபுஜ துர்க்கையை தரிசியுங்கள். இத்தலம் கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் – உப்பிலியப்பன் கோயில் – அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம் மூலமாகவும் இக்கோயிலை அடையலாம்.

சிம்ம லக்னம்

உங்கள் லக்னத்தை இயக்கும் மூன்று கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கையைப் பெறுவதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம், பழநி முருகன் கோயில். அக்கோயிலுக்குச் சென்று ராஜ அலங்கார முருகனை மறக்காது தரிசியுங்கள். அல்லது வீட்டில் ராஜ அலங்கார முருகனின் படத்தை வாங்கி வைத்துக் கொண்டு வணங்குங்கள்.

கன்னி லக்னம்

பெருமாள், பள்ளி கொண்ட கோலத்தில் அருளும் தலத்தை தரிசிக்கும்போது நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும். அதிலும் கடற்கரையோரம் அருளும் பெருமாளாக இருப்பின் நற்பலன்கள் அதிகரிக்கும். புண்டரீக முனிவரின் பக்தியை மெச்சி மாமல்லபுரத்தில் பெருமாள் பள்ளிகொண்ட கோலத்தில் சேவை சாதித்தார். இவ்வாறு சயனத் திருக்கோலத்தில் காட்சி தந்தமையால் பெருமாள், ஸ்தலசயனப் பெருமாள் ஆனார். சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் அமைந்துள்ளது.

துலா லக்னம்

எந்த கிரகங்கள் எங்கு இருந்தாலும் சரி, தெய்வ சக்தியை அடிபணியுங்கள். அதிலும் புதனை பலப்படுத்தும் அம்சமாகவே உள்ள பெருமாளை எப்போதும் வணங்குங்கள். குறிப்பாக, காஞ்சிபுரத்திலுள்ள நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான பச்சை வண்ணப் பெருமாளை அவ்வப்போது தரிசித்துவிட்டு வாருங்கள். பச்சை வண்ணப் பெருமாளின் அருளால் புதன் பிரமாண்டமான வாழ்வைத் தருவார்.

விருச்சிக லக்னம்

கிரகங்கள் எப்படியிருந்தாலும் பிராப்தம் எனும் முன்வினைப் பயனை மாற்றியமைக்கும் சக்தி தெய்வத்திற்குத்தான் உண்டு. எனவே, உங்களின் வாழ்க்கை யோகமாக மாற நீங்கள் தில்லை ஸ்தானம் என்றழைக்கப்படும் திருநெய்த்தானம் தலத்திற்குச் சென்று வாருங்கள். அத்தலத்தில் அருளும் நெய்யாடியப்பரையும், பாலாம்பிகையையும் தரிசித்து வாருங்கள். இத்தலம் தஞ்சாவூர், திருவையாறுக்கு அருகேயுள்ளது.

தனுசு லக்னம்

அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கு, நீங்கள் செல்ல வேண்டிய தலம் வில்வாரணி முருகன் கோயிலாகும். சகல நட்சத்திரங்களுக்கும் இவர் அருள்பாலிப்பதாக புராண ஐதீகம் நிலவுகிறது. கருவறையில் நாகாபரணத்துடன் முருகப் பெருமானும், சுயம்பு வடிவமான சிவபெருமானும் ஒரு சேர காட்சி தருகின்றனர். இத்தலம் திருவண்ணாமலை வேலூர் சாலையில் கலசப்பாக்கத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், போளூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

மகர லக்னம்

கிரகங்களின் முத்தான நன்மைகள் காலத்தே கிடைத்திட இந்த கிரகங்களை இயக்கும் சக்தியான இறைவனை நாடிச் செல்லுங்கள். அத்தகைய ஒரு தலம், திருநின்றவூர். தாயாரின் பூரண அனுக்கிரகமும், பெருமாளின் பொங்கும் அருளும் நிறைந்த தலம் இது. இத்தலத்தில் கருணையே சொரூபமாக தாயார், ‘என்னைப் பெற்ற தாயே’ என்கிற திருநாமத்தோடு அருள்கிறாள். சுதாவல்லி என்கிற திருநாமமும் உண்டு. பெருமாள், பக்தவச்சலன். இத்தலம் திருவள்ளூருக்கு அருகேயுள்ளது.

கும்ப லக்னம்

உங்களை சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்கள் வழி நடத்துவதால் மறக்காமல் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், உரிய வழிபாட்டை மேற்கொள்வதும் நல்லதாகும். அதனால் திருப்பதி பெருமாளான வெங்கடாஜலபதியை வருடத்திற்கு ஒருமுறையேனும் தரிசித்து வாருங்கள். வீட்டில் பெரிய அலர்மேல் மங்கைத் தாயார் – திருப்பதி நிவாசப் பெருமாள் படத்தை வாங்கி வைத்து வணங்குங்கள்.

மீன லக்னம்

உங்களின் சொந்த ஜாதகத்தில் எத்தனைதான் கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும், எல்லாவற்றையும் சரி செய்யும் சக்தி தெய்வத்திற்கு உண்டு. கிரகங்களுக்கு பிரமாண்ட பலத்தை அளிப்பவையே தெய்வங்கள்தான். எனவே, உங்களின் யோகாதிபதிகள் பூரண பலன்களை கொடுக்க நீங்கள் செல்ல வேண்டிய தலம், குறுக்குத்துறை முருகன் கோயிலாகும். இக்கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில் அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்தும், டவுன் ரயில் நிலையத்தில் இருந்தும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

Related Stories: