உலகளாவிய மலை வழிபாடு

பகுதி 1

வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மனிதர்கள் மலையின் உருவத்தையும் உறுதியையும் அதன் உயரத்தையும் கண்டு வியந்து போற்றினர். கைக்கு எட்டாத வானத்தை மலை தொட்டு விடுவதாக எண்ணி அஞ்சினர். மலையிலிருந்து தான் பகலில் கதிரவனும் இரவில் சந்திரனும் தங்களுக்கு ஒளி தருகின்றான் என்று நம்பினர். உதயசூரியன் உதயசந்திரனைக் கண்டு மகிழ்ந்த ஆதி மனிதர்கள், இவை வானவழியே நகர்ந்து சென்று ஒரு மலையில் இருந்து இன்னொரு மலைக்கு இடம் பெயர்வதாகக் கருதினர். இக்கருத்தின் அடிப்படையில் தொன்மக்கதைகளை உருவாக்கினர். வழிபாட்டு சடங்குகளை நடத்தினர். இரவு நேரங்களில் நிலவொளியில் மலைப்பகுதியில் பாடல் களைப் பாடி ஆடி மலைக் கடவுளைத் துதித்தனர்.

இக்கட்டுரையில் மலை வழிபாடு பற்றி மட்டுமே அறிந்து கொள்வோம்

அனைத்துப் பெரிய நிறுவன சமயங்கள் இயக்கமாக உருவெடுத்துப் பரவுவதற்கு முன்பு இயற்கை வழிபாடு (மலை வழிபாடு) உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவியிருந்தது. உலகிலுள்ள இதர சமயங்கள் பரவுவதற்கு முன்பிருந்தே மண்ணின் மக்கள் மலை வழிபாட்டை செய்தனர். என்பதை விவிலியம் வாயிலாக அறிகிறோம். இந்தியாவில் பக்தி இயக்கம் தோன்றி வைதீக சமயங்கள் தீவிரமாகப் பரவுவதற்கு முன்பு நாட்டுப்புறச் சமயங்களிலும் பௌத்த சமயத்திலும் மலை வழிபாடு முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது.

வழிபாட்டுக் காரணங்கள்

மலையைப் போற்றி வழிபடுவதற்கு சில காரணங்கள் உண்டு.

1. மலையை விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையிலான இணைப்பு என்று மக்கள் நம்பினர்.

2. மலையின் வழியே ஏறி வானத்தை அடையலாம் உயரத்திற்குச் செல்லலாம்.

3. தெய்வங்கள் மலை போன்ற மிக உயரமான இடத்தில் வசிக்கும். இக்கருத்து தெய்வங்களின் மீதான உயர்வையும் சிறப்பையும் வலியுறுத்துகிறது.

4. மலை பல வளங்கள் நிறைந்த மையம். உணவு, உறைவிடம், பொழுதுபோக்கு நிறைந்த மக்களின் சகல தேவைகளையும் நிறைவேற்றும் நிலப் பகுதி. அங்கு இருக்கும் தூய காற்றும் சுனைகளும் அருவியும் செடி கொடி மரங்களும் தரையில் இருக்கும் குளம், குட்டை, ஆறு, செடி, கொடி மரங்களை விட மிகப் பெரியவையாகவும் வேகமானவையாகவும் இருந்ததை கண்ணுற்று வியந்தனர்.

4. வளம் என்றவுடன் மனிதனுக்கு நினைவு வந்தது கருவளம் படைத்த பெண் மட்டுமே. எனவே மலையை அச்சம் தரும் அணங்கு அல்லது பாவை என்ற பெயரில் பெண் தெய்வமாகக் கொண்டு வழிபட்டனர்.

5. குன்றுகள் ஆண்ட்டெனா போல செயல்பட்டு பிரபஞ்ச சக்தியின் ஆற்றலை மண்ணுக்கு கொண்டு வருவதாகவும் மக்கள் நம்பினர். இதனால் நான்கு குன்று (சதுர கிரி), ஏழு குன்று (ஏழு மலை), எட்டு குன்று (திருவண்ணாமலை) உடைய மலைகளில் மக்கள் பிரபஞ்ச சக்தி பெறக் குவிந்தனர் அச்சமும் வழிபாடும்மலைத் தெய்வம் ஆதி மனிதர்களுக்கு அச்சம் தரத்தக்க தெய்வமாக விளக்கினாள். இவள் சகல ஆற்றலும் படைத்தவள். மலைத் தெய்வங்களின் எச்சமாக இன்று கொல்லிமலையின் கொல்லிப் பாவை திருக்குற்றாலத்தின் செண்பகாதேவி, அழகர் மலையின் ராக்கம்மா போன்ற தெய்வங்களை வணங்குகின்றனர்.

மலைப் பெண் கடவுள் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற வாசகத்தை மெய்ப்பிக்கிறாள். மலைவளம் மிகப்பெரிய வளம். இவள் வளங்களின் பிறப்பிடம். அதே வேளையில் மலையில் இருந்து பாறைகள் உருண்டு வந்தாலும் மலை காய்ந்து வறண்டு போனாலும் அருவியில் பெருவெள்ளம் ஏற்பட்டாலும் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் பேரழிவைச் சந்தித்தனர். அவ்வமயம் மலைக் கடவுள் சினந்து தம்மை தண்டிக்கிறாள் என்று கருதினர். அவளுக்கு உயிர்ப்பலி கொடுத்து அமைதிப்படுத்தினர்.

மலையரசி

மலையையே கடவுள் என்று கருதிய காலத்துக்கு அடுத்து மலையில் தூய, தீய ஆவிகள் இருப்பதாக நம்பினர். மலைகளில் இருந்த ஆவிகள் நல்லவை செய்யும் என்று நினைத்தபோது அவற்றை தெய்வமாகவும் வணங்கினர். இந்தப் பழக்க வழக்கத்தை நாம் நம் தமிழ்நாட்டிலும் காணலாம். மலையரசி பல குலங்களின் குலதெய்வம் ஆக விளங்கினாள். கவிஞர் கண்ணதாசனின் குலதெய்வத்தின் பெயர் மலையரசி. இமயமலையின் மகள் ஹிமாவதி எனப்படும் உமா பார்வதி பலருக்கும் வழிபடு தெய்வம் ஆனாள்.

கடவுளரின் உறைவிடம் மலை

ஆதி கால மனிதரின் சமய நம்பிக்கையில் உயரமான் மலையில் அதீத சக்தி பெற்ற தெய்வங்கள் இருந்தனர். ஒலிம்பஸ் மலையில் தங்களின் கடவுளர் தங்கி இருப்பதாக கிரேக்கர்கள் நம்பினர். எத்னா மலையில் ரோமர்கள் தங்கள் கடவுள் பல்கான் இருப்பதாக நம்பி வணங்கினர். வட இந்தியாவில் கைலாச மலையில் சிவபெருமான் தங்கி இருப்பதாக ஐதீகம்.

இறந்தவர்களின் இருப்பிடம்

மனுக்குலத்தில் சில இனங்களில் இறந்தவர்களின் பிணத்தை மலை உச்சியில் கொண்டு போய் காக்கை கழுகுகளுக்கு இரையாக்கி விடும் பழக்கம் இருந்தது. அவர்கள் மலையில் தன் முன்னோர்கள் வசிப்பதாக நம்பினர். இதனாலும் மலை என்பது மனிதனுக்கு அச்சம் தருவதாகவே இருந்தது.

மலை வழிபாட்டின் வளர்ச்சி

மலை வழிபாட்டோடு தொடர்புடையதாகவே சூரிய சந்திர வழிபாடுகளும் கிரிவலம் வருதல் போன்றவையும் மலையேற்றமும் மலை மேலே இருக்கும் முருகன், ஐயப்பன், பெருமாள் போன்ற பிற்காலத் தெய்வ கோவில்களுக்கு புனித யாத்திரை செல்லும் பழக்கமும் தோன்றின.

மலைச்சாமி

நீண்ட நெடுங்காலமாக மலையை வணங்கி வந்த மக்கள் அம்மலையே தம் தெய்வமாக புனிதத் தலமாகக் கருதினர். மதுரைக்கு அருகில் உள்ள ஒரு மலையை மக்கள் மலைச்சாமி என்றே அழைக்கின்றனர். அதனையே தன் குலசாமியாக கொண்டு தன் பிள்ளைகளுக்கும் பெயர் சூட்டுகின்றனர். இம்மலையே தெய்வமாக இருப்பதினால் அந்த மலையின் மீது செருப்பு அணிந்து நடப்பது கிடையாது.

மலையில் உணவு சாப்பிட நேர்ந்தால் எச்சிலையை மலையின் மீது போட்டு விட்டு வருவது பழக்கமில்லை. மலையை எந்த வகையிலும் அவர்கள் அசுத்தம் செய்வதில்லை. கார்த்திகைத் திருநாளன்று மண்ணை அள்ளிச் சென்று மலை உச்சியில் சேர்த்து மலைக்கு உரம் ஊட்டுவர். இப்பழக்கம் ஆதி மனிதன் காலம் தொட்டு தோன்றியதாக இருக்க வேண்டும். இத்தகைய பழக்கவழக்கம் மற்ற நாடுகளிலும் மற்ற இன மக்கள் மத்தியிலும் காணப்படுகின்றன.

பௌத்த சமயத்தில் மலை வழிபாடு

பௌத்தத் துறவிகள் தாம் தங்கியிருக்கும் மடங்களை மலை உச்சியிலும் மக்களுக்கு சேவையாற்றும் ஆலயங்களை மலையடிவாரத்திலும் அமைத்தனர். மலை உச்சியில் இருந்தபடி வானவியல் ஆராய்ச்சி, ரசவாதம், மூலிகை மருத்துவம் போன்றவற்றில் ஈடுபட்டனர். காட்டுப் பகுதியில் வரும் விலங்குகளில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளவும் விலங்குகளுக்கு ஊறு விளைவிக்காமல் இருக்கவும் வெறும் கைகளால் தாக்கும் கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்புக் கலைகளிலும் வர்மக் கலைகளிலும் தேர்ச்சி பெற்றனர்.

கிரி வலமும் மலையேற்றமும்

பௌத்தர்கள் பௌர்ணமி நாட்களில் சந்திர ஒளியில் மூழ்க வேண்டும் என்ற காரணத்திற்காக மலையைச் சுற்றி வரிசையாக நிதானமாக நடந்து வந்தனர். இவ்வாறு நடப்பது அவர்களின் சமய நடைமுறையாக (ரிலீஜஸ் பிராக்டிஸ்) இருந்தது. இன்று இந்து சமயத்தினர் மலைக்கோவில்களுக்கு தேடிச் சென்று வணங்கி வருகின்றனர். சதுரகிரி மலைக்கு அமாவாசை அன்று பக்தர்கள் ஏறிப் போய் உச்சியில் உள்ள சுந்தரலிங்கத்தையும் சந்தன லிங்கத்தையும் வணங்கி வருகின்றனர்.

வெள்ளியங்கிரி மலையின் ஏழு குன்றுகளையும் மக்கள் ஏறி இறங்குகின்றனர். திருப்பதியில் மலையில் ஏறிச் சென்று பெருமாளை சேவிக்கின்றனர். திருச்செங்கோடு மலையில் ஏறி போய் அர்த்தநாரியை வணங்குகின்றனர். பழனி மலை, சென்னி மலை, ஓதி மலை, தோரண மலை, பச்சை மலை போன்றவற்றில் மலை மேல் இருக்கும் முருகனை பக்தர்கள் மலை மீது ஏறி சென்று தரிசிக்கின்றனர். இவ்வாறு மலையேறிச் சென்று இறைவனை வணங்கும் முறையை முதலில் தோற்றுவித்தவர்கள் பௌத்த துறவிகள் ஆவர். திருவண்ணாமலையில் இன்று எல்லோரும் கிரிவலம் வருவதை நாம் எல்லோருமோ அறிவோம்.

சந்திர தியானம்

சூரிய சந்திரர் வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்த இவர்கள் தங்கள் மடாலயங்கள் இருந்த மலை அடிவாரத்தில் சந்திர தீர்த்தம் அமைத்து அங்குத் தினமும் குளித்து முடித்து இரவில் சந்திரஒளியில் தியானம் செய்தனர். சந்திர தியானத்தினால் உடல் முழுமையும் குளிர்ச்சி பெறும் என்பதால் சந்திர ஒளியின் வளரும் குளிர்ச்சியில் தங்கள் உடலை மெல்ல நனைய விட்டனர். சந்திர தீர்த்தம் இருந்த பௌத்த மடாலயங்கள் பின்னர் கோவில்களாக மாற்றம் பெற்றபோது அவை சந்திர ஸ்தலங்களாகப் புகழ் பெற்றன.

இன்றைக்கும் கிரிவலம் வருதல் திருப்பதி திருவண்ணாமலை பழனி வெள்ளியங்கிரி சதுரகிரி மலைகளில் நடைமுறையில் உள்ளது. பௌர்ணமி அன்று மலையேறுவதும் மலையைச் சுற்றி வருவதும் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாக்கும். பௌத்தர்கள் தம் மடாலயங்களில் கௌதம புத்தருக்கு பௌர்ணமி முடிந்த நான்காவது நாள் சதுர்த்தி அன்று சிறப்பான பூசைகளை செய்தனர்.

மலையின் கோவில் காடுகள்

மலைகளில் அச்சம் தரக்கூடிய பகுதிகளை புனிதக் காடுகள் என்று பெயரிட்டு அழைக்கும் மரபு பல நாடுகளில் இருந்தது. அங்கு தூய (guardian spirits) ஆவிகளும் தீய (evil spirits) ஆவிகளும் இருந்தன. பாதி தெய்வங்களாக (semi gods) விளங்கும் யட்சிகளும் (இசக்கி) யட்சர்களும் இங்கு இருந்ததாக நம்பப்பட்டது. மதுரைக்கு அருகில் உள்ள கரந்த மலை, அழகர் மலை ஆகியவற்றில் கோவில் காடுகள் உள்ளன. இவ் அடர்ந்த காட்டுப் பகுதியில் தெய்வங்கள் உறைவதாக நம்புகின்றனர்.

கொடைக்கானல் மலையில் மதி கெட்டான் சோலை என்று அழைக்கப்படும் புத்தி பேதலிக்கச் செய்யும் வாசமுள்ள மலர்களைக் கொண்ட மரங்கள் நிறைந்த காடுகள் கூட மனிதர்கள் வரக்கூடாத அல்லது மனிதர்கள் உள்ளே சென்றால் திரும்பி வர இயலாத புதிரான காட்டுப் பகுதியாகவே உள்ளது. இத்தகைய அச்சமூட்டும் பகுதிகளை தேவரக்காவு, புனிதக் காடுகள், தெய்வக் காடுகள் (sacred groves) என்று பல பெயர்களில் அழைத்தனர்.

சீனாவில் போதி மலைகள்

சீனாவில் புத்தநிலை அடைந்த போதிசத்துவர்கள் நால்வரின் பெயரால் புனித மலைகள் அழைக்கப்படுகின்றன. அவர்கள் இருந்து சமயப் பணியாற்றிய மடாலயங்கள் அமைந்திருந்த புதுவோ, ஊத் ஆயி, ஜியோ ஹுவா, ஏ மே இ என்ற நான்கு மலைகளை சீனர்கள் புனித மலைகளாகப் போற்றுகின்றனர். இவற்றில் புதுவா என்ற மலை தமிழில் உள்ள பொதிகை மலையின் சீன (மன்றின்) மொழியாக்கமாகும். மன்றின் மொழி என்பது பழைய சீன மொழியின் இன்றைய வடிவம் ஆகும். தமிழ்நாட்டில் பொதிகை மலையில் வாழ்ந்த பௌத்த துறவிகள் பொதலகா என்று அம் மலையை அழைத்தனர்.

சீனாவின் நான்கு புனித மலைகளின் தலைமை இடமாக அங்கேயுள்ள புதுவா மலை விளங்குகின்றது. ஊத் ஆயி மலை போதிசத்துவர் மஞ்சுஸ்ரீ வாழ்ந்த இடமாகும். ஜியோ ஹுவா மலை பௌத்த துறவி சித்தி கர்பா பெயரால் அழைக்கப்படுகின்றது. ஏ மேயி என்ற மலை சம்பந்தபத்ரா என்ற புத்த துறவி வாழ்ந்த பௌத்த மண்டலமாகும்.

கோவர்த்தனகிரி காட்டும் குடிப்பூசல்

வைணவப் பாரம்பரியத்தில் திருப்பதி மலை மீது ஏறிச் சென்று வெங்கடேச பெருமாளை வழிபடுகின்ற முறை தற்போது பரவலாக இருந்தாலும் கிருஷ்ணனுடைய வரலாற்றில் கோவர்த்தனகிரி வழிபாடு மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. இந்திரன் இடிமழை பொழிந்து ஆயர் குலத்தை அழிக்க முற்பட்ட போது கண்ணன் ஆயர் குலத்து மக்களை கோவர்த்தன கிரிக்கு அடியில் வந்து பாதுகாப்பாக நிற்கும்படி பணித்தான். தன் சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தூக்கிப் பிடித்தான். மக்கள் மழையால் சேதமாகாமல் மலையின் கீழ் கூடி நின்றனர். இந்திரனுக்கும் கண்ணனுக்கும் இடையிலான இப் போட்டி மழைப் பொழிவையும் மழை நிறுத்தத்தையும் கொண்டிருந்தன.

இந்திரன் மருத நிலத் தெய்வம் ஆவான். கண்ணன் ஆயர் குலத் தெய்வம் ஆவான். முல்லை நிலத்தின் ஆயர் குடிகளுக்கும் மருத நிலத்தின் வேளாண் குடிகளுக்கும் குலத்திற்கும் இடையிலான போட்டியை கோவர்த்தனகிரி வழிபாடு உணர்த்துவதாக முனைவர் ச. கல்யாணி முதலான அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர்.மேலும், காளிங்க நர்த்தனம் என்பது மண்ணின் மைந்தர்கள் வழிபட்ட அவர்களின் குலக்குறியான நாகத்தை கிருஷ்ணர் அழித்து ஒழித்த கதை ஆகும் என்பது மானுடவியலாரின் கருத்தாகும். இந் நர்த்தனம் நாகர்களின் தோல்வியை சுட்டிக் காட்டுகின்றது, என்பர். கோவர்த்தத்னகிரி மலை வரலாறு பண்டைய குலங்கள் மற்றும் குடிகளின் வரலாற்றை பேணிப் பாதுகாத்து வருகிறது.

அயல் நாடுகளில் மலை வழிபாடு

ஐரோப்பிய பண்பாட்டில் மிகவும் தொன்மையான பண்பாட்டிற்குரிய கிரேக்கர்கள் ஒலிம்பஸ் மலையை தங்களுடைய தெய்வங்கள் வசிக்கும் மலையாகக் கருதினர். ரோமர்களின் புனித மலையாக ஆல்ப்ஸ் மலை விளங்கியது. யூதர்கள் சீனாய் மலையை தங்களுடைய புனித மலையாகக் கருதினர். ரோமர்களின் கடவுளான பல்கான் வசிக்கும் இடமாக எத்நா மலை போற்றப்படுகிறது. இத்தாலி நாட்டு மக்கள் இம்மலையை இறைவனின் இருப்பிடமாக கருதுகின்றனர். இலங்கையில் ஆடம்ஸ் பீக் எனப்படும் மலை உச்சியில் புத்தரின் பாதம் இருப்பதால் அது சிங்கள பௌத்தர்களுக்கு உரிய புனித மலையாகப் போற்றப்படுகிறது.

ரஷ்யாவில் அக்கௌன்ட் என்ற மலை, துருக்கியில் அக்ரா அல்லது சா ஃபோன் என்ற மலை புனித மலைகள் ஆகும். பிலிப்பைன்ஸ் தீவுகளில் வாழும் மக்கள் ஆராயத் என்ற மலையை இன்றும் கடவுளாகப் போற்றி வழிபட்டுவருகின்றனர்.

ஜப்பானின் மலைச்சாமி – காமி

ஜப்பான் நாட்டில் மலையைக் கடவுளாக வணங்கும் போக்கு அங்கு பௌத்த சமயம் பரவுவதற்கு முன்பிருந்த ஷின் தோ சமயத்தில் இருந்தது. இதுவே ஜப்பான் மக்களின் ஆதி சமயம் ஆகும். ஷின் தோ சமயத்தினர் காமி என்ற பெயரால் மலைகளை அழைத்தனர். 7ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் பின்பு அங்கு பரவிய பௌத்த சமயம் அங்கிருந்த நாட்டார் சமயமான ஷின் தோ சமயத்தின் பல நடைமுறைகளைத் தனதாக்கிக் கொண்டது. ஷின் தோ சமயத்தில் சங்காக்கு ஷிங்கோ என்ற சொல் மலை மீதான பக்தியைக் குறித்தது. அங்கு மலையிலிருந்து தோன்றும் உதய சூரியனையும் உதய சந்திரனையும் தியானிப்பது பழங்கால சமய நடைமுறையாகும்.

சந்திர தியானம் என்ற (moon viewing) நடைமுறை இன்றும் தொடர்கின்றது. நகரத்து மக்களும் தங்கள் ஜன்னல் வழியாகத் தோன்றும் சந்திரனை அமைதியாக கண்டு தியானிப்பர். குடும்பத்தினர் அனைவரும் ஜன்னல் முன்பு கூடி சந்திரன் ஜன்னல் வழியாக மேலே சென்று மறையும் வரை கூர்மையாகப் பார்த்துத் தியானித்துக் கொண்டே இருப்பார்கள். விளக்கு தியானம், கண்ணாடி தியானம் போன்றது. ஜப்பானியர்களுக்கு சந்திர தியானம் ஆகும். சூரிய தியானத்தை இவர்கள் கோராய்க்கோ என்று அழைப்பர். ஜப்பானிலும் மலையில் உள்ள ஆவிகளை சாண் சின் என்பர். இந்த ஆவிகளை அடக்கும் பூசாரிகளாக (shamans) முசோக் என்பவர்கள் இருந்தனர். இவர்களைப் புலிகளின் காவலர் என்றனர். பொதுவாக, மலையில் வாழும் விலங்குகளுக்கு காவலராக இப் பூசாரிகள் விளங்கினர்.

(தொடரும்)

முனைவர் செ. ராஜேஸ்வரி

Related Stories: