ஜாதகத்தின் அஸ்திவாரம் எது?

எந்த ஒரு ஜாதகத்திலும், லக்னம் பலமாக இருக்க வேண்டும். காலில் அடிபடலாம். கையில் அடிபடலாம். உடம்பில் வேறு எந்த பாகத்திலும் அடிபடலாம். ஆனால், மூளையில் அடிபட்டால் மற்ற பாகங்கள்செயலிழந்து போய்விடும். மருத்துவத்தில் பார்த்திருக்கலாம். இதயம் செயலிழந்து விட்டாலும்கூட வேறு ஒரு இயந்திரத்தை வைத்து இதயத்தின் செயலை மறுபடியும் மீட்பதற்கு முயற்சி செய்வார்கள். நுரையீரலுக்கும் அப்படியே. சிறுநீரகம் செயலிழந்து விட்டால், ரத்தத்தைச் சுத்தி கரிக்கும் ஒரு கருவியின் உதவி கொண்டு, சிறுநீரகத்தின் வேலையைச் செய்ய வைத்து விடுவார்கள். ஆனால், மற்ற உறுப்புகள் நன்றாக இருந்து, மூளை செயலிழந்துவிட்டால்? அதனால்தான் இதயத்துடிப்பு நிற்பதை மட்டும் வைத்துக்கொண்டு, ஒருவன் இறந்துவிட்டான் என்று சொல்வதில்லை.

ஆனால், மூளை செயலிழந்துவிட்டால், இறந்து விட்டான் என்றுதான் சொல்வார்கள். இதேதான் ஜாதகத்திலும், நாம் பொருத்திப் பார்க்க வேண்டும். லக்னம் செயலிழந்த பிறகு, வாழ்க்கை என்ற ஒன்று இருந்தாலும், அது ஆக்சிஜன் குழாயை மூக்கில் சொருகிக் கொண்டு வாழ்வது போலத்தான். பனிரெண்டு பாவங்களில் அடுத்த 11 பாவங்களையும் இழுத்துச் செல்லும் இன்ஜின் லக்ன பாவம்தான்.அதனால், அந்த கட்டத்தை மிகவும் ஜாக்கிரதையாக பரிசீலனை செய்வார்கள். ஒருவருக்கு மற்ற பாவங்கள் கெட்டு விட்டாலும், லக்கினம் பலமாக இருந்தால், பிழைத்துக் கொள்வார். எட்டாவது படித்தவர், 80 கோடிக்கு அதிபதியாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அவருக்கு கல்வி ஸ்தானம் கெட்டுவிட்டது. ஆனால் லக்னம் பலமாக இருப்பதால், கல்வி பலமாக இருப்பவர்கள் பலர் அவரிடத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதை அனுபவத்தில் பார்க்கலாம். நல்ல செல்வாக்கு, பணம், புகழ் இருக்கக்கூடிய ஒருவருக்கு ஏழாம் பாவம் கெட்டு, லக்னம் பலமடைந்து இருக்கிறது. அவருக்கு ஒரே ஒரு குறைதான் குடும்ப வாழ்வில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. ஆனால் வெளியில் அவர் மகாராஜா போல் இருக்கிறார்.

லக்னம் பலமாக இருப்பதால், வெளியில் இந்த பிரச்னைகளைக் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். லக்னத்தில் இன்னொரு விஷயமும் இருக்கிறது.லக்னம் பலமாக இருந்துவிட்டால், அவர்கள் மற்ற பாவங்களினால் ஏற்படும் குறைகளை பெரிய அளவில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் லக்னம் பலம் இழந்து விட்டால், மற்ற பாவங்கள் வலுவாக இருந்தாலும், ஏதோ சில காரணங்களினால் தசாபுத்தி கோச்சார நிலைகளால், ஒரு சில குறைகள் ஏற்படுகின்ற பொழுது, அதனைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். திடீர் முடிவு எடுத்து தற்கொலை செய்பவர்களின் ஜாதகங்களில் லக்ன பாவம் அடிவாங்கியிருக்கும்.கட்டிடம் எத்தனைதான் அழகாக இருந்தாலும் அஸ்திவாரம் பலமாக இருக்க வேண்டும் அல்லவா. அதனால்தான் எந்த ஜோதிடரும், ஒரு ஜாதகத்தை கையில் எடுத்தவுடன் லக்ன பாவத்தைத்தான் பார்ப்பார்கள். லக்ன பாவம் என்பது சுயத்தைக் குறிக்கிறது. சுய பலத்தையும், சுய ஞானத்தையும் குறிக்கிறது. ஆயுள் பாவம் பலமடைந்து லக்ன பாவம் பலவீனம் ஆகிவிட்டால், அந்த ஜாதகம், ஆயுள் பாவத்தின் மதிப்பை உணராது இருக்கும். ஒரு முதியவர் 90 வயது. ஒரு தேநீருக்கும் மற்றவரைச் சார்ந்து இருக்கும் நிலை.

அவர்கள் கொடுக்கக்கூடிய பழைய சட்டைகளையும் காலணிகளையும் அணிந்து கொள்வார்.ஆனால் அவராக ஒரு 1 ரூபாய்கூட சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கிறார்.நான் இது ஏதோ இடையில் ஏற்பட்டது என்று கருதி விசாரிக்கும் பொழுது, அவரைப் பற்றி அறிந்தவர்கள் சொன்னார்கள், அவர் ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான். எந்த வேலையும் அவரால் பார்க்க முடியாது. படிப்பும் கிடையாது. எங்கேயாவது சாப்பிடுவார், எங்கேயாவது தூங்குவார். ஆனால், ஆயுளில் எந்த பங்கமும் இல்லை. 90 வயதாகிறது. ஒரு இருமல் சளி தொந்தரவு இல்லை. காரணம், ஆயுள் பாவம் நன்றாக இருக்கிறது. ஆனால் லக்னம் கெட்டுவிட்டது. பிறரைச் சார்ந்து வாழ்கின்ற எல்லாருடைய ஜாதகங்களை பார்த்தாலும், அவர்களுடைய லக்னம் பலவீனமாக இருக்கும். லக்னத்தை மட்டும் பார்க்காமல், லக்னப் புள்ளியையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதுவும் முக்கியம். லக்கின புள்ளி அமைந்த நட்சத்திரம் கெட்டுவிட்டால், அங்கேயும் லக்னம் கெட்டு விட்டதாகத் தான் பொருள். ஒரு மேஷ லக்கின ஜாதகம். செவ்வாய் நான்காம் இடத்தில் நீசம். செவ்வாய் அமர்ந்த பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி மேஷத்தில் நீசம். ஆனால் கடகத்தின் அதிபதி சந்திரன் செவ்வாயோடு இணைந்து அவருக்கு நீச பங்கத்தைத் தருகிறார்.ஜாதகருடைய அம்மா, ஒரு டீ கடையை வைத்து நடத்திக் கொண்டிருக்கிறார். இவர் எந்த வேலையும்செய்யாமல், அம்மாவைச் சார்ந்து அவர் சம்பாத்தியத்தில் வாழ்ந்து, பிறகு திருமணமும் முடிந்து, இன்றைக்கு மனைவியைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த டீக்கடையை இப்பொழுது இவர் மனைவிதான் கவனித்துக் கொண்டிருக்கிறார். லக்கினாதிபதி செவ்வாய் நீசபங்கம் பெற்று விட்டதால், ஏதோ ஒரு விதத்தில் இவருக்கு வேளைக்கு சாப்பாடு கிடைத்துவிடுகிறது. ஆனால், சந்திரனாகிய தாய் மனைவி மாமியார் இவர்களைச் சார்ந்துதான் வாழ்கிறார். கிரகம் நீசமானாலும் அதற்குரிய வேலையை (நீசம்) செய்துவிட்டுத்தான் பங்கம் ஆகிறது. என்னுடைய ஜாதகத்திலேயே, 6க்கு உரியவன் பத்தில் நீசம். ஆனால் 10க் குரியவன் உச்சம். நீச பங்க ராஜயோகம் என்றுசொல்வார்கள். சில ஜோதிடர்கள் இதனை யோகமாகச் சொல்வார்கள். இந்த யோகம் முதலில் செயல்படாது. நீசம்தான் முதலில் செயல்படும். பிறகு அது பங்கமாகும். அதன் பிறகு அது யோகமாகச் செயல்படலாம். அப்படிச் செயல்படுவதற்கு தசாபுத்திகள் ஒத்துழைக்க வேண்டும். கோச்சாரம் சாதகமாக வரவேண்டும். முன்சொன்ன என்னுடைய ஜாதக விஷயத்துக்கே வருகின்றேன். 6க்கு உரியவன் நீசம் பெற்றதால், முதலில் கஷ்டப்பட்டு கிடைத்த அரசு உத்தியோகம் நிலைக்கவில்லை. நான்கு ஆண்டுகள் கழித்து அந்த வேலையை விட்டுவிட்டு, அரசு உதவி பெறும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். இதைவிட முக்கியம், முதலில் வேலை கிடைப்பதே பெரும்பாடாகி விட்டது.

இதற்கு என்ன பொருள்?

முதலில் ஆறாம் அதிபதி நீசம் ஆனதால் வேலை கிடைக்கவில்லை. பங்கம் ஆனதால் வேலை கிடைத்தது. பிறகு அது யோகமாக மாறி அந்த வேலையை விடச் செய்து, வேறு ஒரு நல்ல வேலையைக் கிடைக்கச் செய்தது. அடுத்தது, இதில் ராஜயோகம் என்றால் அவரவர்களுக்கு உரியதுதான். ஒரே வேளை மட்டும் சாப்பாடு கிடைப்பவருக்கு மூன்று வேளை சாப்பாடு கிடைக்கும். படியாக அமைந்து விட்டாலே, அது அவரைப் பொறுத்தவரை ராஜயோகம்தான். இதையும் மனதில் கொண்டுதான் பலனைச் சொல்ல வேண்டும்.