அருளாளர்கள் யார்?

ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் ஒருமுறை ஒரு பக்தர் கேட்டாராம்;
‘‘அது என்ன சுவாமி, ஒரு கொடுமைக்கார இரணியன் இருந்ததற்கு பகவான் தூணைப் பிளந்து கொண்டு நரசிம்மராக ஆக்ரோஷமாக அவதரித்தார் என்று சொல்கிறார்கள். இன்று எத்தனை இரணியர்கள் இருந்தாலும்கூட பகவான் வரவில்லையே?’’ ராமகிருஷ்ண
பரமஹம்சர் சொன்னாராம்;
‘‘நரசிம்ம அவதாரத்தை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பகவான் இரணியனை வதைப்பதற்கு தூணைப் பிளந்து கொண்டு அவதாரம் எடுக்கவில்லை. எல்லா இடங்களிலும் என்னுடைய இறைவன் இருக்கிறான். “சர்வம் விஷ்ணு மயம் ஜெகத்’’ என்று உறுதியாகச் சொன்ன பக்த பிரகலாதனின் வாக்கைக் காப்பாற்றுவதற்குத்தான் நரசிம்ம அவதாரம் எடுத்தான். இன்றைக்கு ஆயிரம் இரணியர்கள் இருக்கலாம். ஆனால் ஒரு பிரகலாதன் இல்லையே! நம்முடைய நாட்டில் பக்திக்குப் பஞ்சம் இல்லை. கோயில்களுக்குப் பஞ்சமில்லை. வழிபாட்டுக்குப் பஞ்சமில்லை. உற்சவங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால் எது பக்தி? எது வழிபாடு? எது ஆன்மிகம்? என்பதைக் குறித்த சரியான புரிதல்கள் இல்லை.
இன்றைக்கு பலரும் தங்களை அருளாளர்கள் என்று தாங்களே சொல்லிக் கொள்கின்றார்கள் அல்லது அவர்களைச் சூழ்ந்து இருக்கக்கூடிய சிலர், அவர்களை விளம்பரப்படுத்துகிறார்கள்.
நாம் உண்மையான அருளாளர்
களின் தன்மையைப் புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நம்மாழ்வார் அருளாளர், ராமானுஜர் அருளாளர், மணிவாசகர் அருளாளர், தேவாரம் பாடிய மூவர்கள் அருளாளர்கள், ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளாளர், ரமண மகரிஷி அருளாளர். இப்படிப் பல அருளாளர்களை நாம் பார்த்துக் கொண்டே வருகின்றோம். ஆனால் ஒரு விஷயத்தை நுட்பமாகக் கவனித்தால் புரியும். இத்தனை அருளாளர்களும் தாங்கள் அருளாளர்கள் என்று எப்பொழுதுமே சொல்லிக் கொண்டதில்லை.
அவர்கள் அருளாளர்கள் என்று அவர் காலத்தில் சொன்னவர்கள்கூட எந்த வணிக, பொருளாதாரப் பலனும் அடைந்தவர்கள் இல்லை. நம்மாழ்வார் தம்மைப் பற்றிச் சொல்லுகின்ற பொழுது, நீசன் என்ற வார்த்தையைப் பயன்
படுத்துகின்றார். நீசனேன் நிறை ஒன்றும் இல்லேன் என் கண் பாசம் வைத்த பரம்சுடர் ஜோதிக்கே என்பது நம்மாழ்வாரின் வாக்கு. ஆனால், இன்றைய அருளாளர்கள் தங்களை ஈசன் என்று சொல்லிக் கொள்கின்றார்கள். மணிவாசகர் தம்முடைய அச்சோப் பதிகத்தில் தம்மை இறைவன் எப்படி அருளினான் என்பதைச் சொல்லுகின்ற பொழுது, ஒரு நாயை தூக்கிப் பல்லக்கில் ஏற்றுவதை போல,
என்னையும் ஒரு பொருளாக்கி பெருமைப்
படுத்தினான் என்று பாடுகிறார்.
‘‘நம்மையும் ஓர் பொருளாக்கி
நாய் சிவிகை ஏற்றி வைத்து
அம்மை எனக்கு அருளியவாறு
ஆர் பெறுவார் அச்சோவே’’
– என்பது அவருடைய வாக்கு.
அருளாளர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால்தான் நமக்கு இவர் அருளாளரா இல்லையா என்பதை அடையாளம் தெரிந்துகொள்ளமுடியும்.
ஆளவந்தார், ஒரு கிராமத்தின் வழியே போய்க்கொண்டிருக்கிறார். உச்சி வெயிலில் ஒருவர் பசிக்கு வயலில் அருகே ஓடும் சேறு கலந்த நீரை இரண்டு கைகளாலும் எடுத்துக் பருகுகிறார். ஆளவந்தாரோடு எத்தனையோ சீடர்கள் இருந்தார்கள். அவர்களுக்கெல்லாம் அந்தக் காட்சி எந்த விதத்திலும் மனச் சலனத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் ஆளவந்தார் அருளாளர் அல்லவா. அவர் இந்தக் காட்சியைப் பார்க்கிறார். அவரிடத்திலே ஏதோ ஒரு சிறப்பைக் காண்கின்றார். அவரை அழைத்து;
‘‘எதற்காக இந்தச் சேற்று நீரைப் பருகுகிறாய்?’’ என்று கேட்ட பொழுது, அவர் சொன்ன விடை அவருடைய ஆன்மிகப் பக்குவத்தை அடையாளப்படுத்துகிறது. அவர் சொன்ன விடை இதுதான்;
‘‘மண்ணை மண் உண்கிறது’’ எத்தனை ஆழமான வார்த்தை பாருங்கள். இந்த ஒரு வார்த்தை மனிதனுடைய சிந்தனைகளைப் புரட்டிப் போட்டுவிடுகிற தல்லவா. எந்த சாஸ்திரத்தில் இருந்து நீங்கள் இதனைத் தெரிந்து கொள்ள முடியும்? ஆளவந்தார் அந்த நிமிஷம் அந்த மனிதனை நினைத்து உருகுகிறார். அவருக்கு என்ன பெயர் என்பது தெரியாது. ஆனால், இவர் அவருக்கு ஒரு பெயர் வைக்கிறார். மாறநேர் நம்பி. நம்மாழ்வார் மீது கொண்ட காதலினால் இந்தப்பெயர் வைக்கிறார். மாறன் என்று சொன்னால் உலகத்தவர் சிந்தனைகளுக்கு மாறாக இருப்பவர். அதனால்தான் 16 வருடம் வரை பால் குடிக்காமல், பழம் சாப்பிடாமல், வேர்க்காமல், குளிக்காமல், எந்தவித மாறுபாடும் இல்லாமல் இருந்த நம்மாழ்வாரை, மாறன் என்று ஆன்மிக உலகம் சொல்லுகிறது.
அவர் மீது கொண்ட அபிமானத்தால், இவருக்கு மாறனேர் நம்பி என்ற ஒரு திருப்பெயரை வைத்து, தம்முடைய அடியார் கூட்டத்தில் முக்கியமானவராக இணைத்துக் கொள்கின்றார். அவர் என்ன ஜாதி, என்ன குலம் என்பதெல்லாம் பார்க்கவில்லை, ஆளவந்தார். இங்கே அவர் பார்த்தது அவருடைய உயிர் ஆற்றலை. அதாவது அவருடைய ஆன்மாவை. ஒருவருடைய ஆன்மாவின் உயர்வை ஊடுருவிப் பார்க்கும் திறன் இருந்தால், அவர்களை அருளாளர்கள் என்று சொல்லலாம்.
இவருடைய வாழ்விலே வேறொரு சம்பவமும் நடக்கிறது. ஆளவந்தாருடைய சொற்பொழிவுக் கூடம், (வைணவத்தில் காலக்ஷேப கூடம் என்பார்கள்) விரிவுபடுத்திக் கட்டுகிறார்கள். அதற்கு ஒரு புதுமனை புகுவிழா (புண்யாக வாசனம்) நடத்த வேண்டும். அன்றைய சமூக நிலைப்படி, ஆளவந்தாரின் அற்புதமான கருத்துக்களை எல்லாம் வெளியில் நின்றே கேட்கிறார் மாறனேர் நம்பி. இவருக்கு ஒரு ஆசை வருகிறது. உள்ளே சென்று குருநாதர் அமரும் இடத்தைத் தொட்டுப் பார்க்க வேண்டுமே என்று நினைக்கிறார். நாளை இவர்களெல்லாம் மந்திரம் சொல்லி புதுமனை புகுவிழா நடத்திவிட்டால், உள்ளே போக முடியாது. உள்ளே போகவிட மாட்டார்கள். எனவே, இன்று நாம் உள்ளே சென்று பார்த்து விடுவோம் என நினைத்து உள்ளே போகிறார்.
இந்தச் செய்தி வழக்கம் போல தீக்குறளைச் சென்று ஓதுகின்ற சிலர் மூலமாக ஆளவந்தாருக்குச் செல்கிறது. அப்பொழுது ஆளவந்தார் சொன்ன பதில்தான் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
“அப்படியா. மாறாநேர் நம்பி உள்ளே போனாரா? எல்லா இடங்களையும் தன்னுடைய திருக்கரங்களால் தொட்டுப் பார்த்தாரா? அவருடைய திருவடிகள் காலஷேபக் கூடத்தின் ஒவ்வொரு பகுதியிலும் பட்டதா? அப்படியானால், சரி. இனி எந்த மந்திரங்களால் நீங்கள் அந்த இடத்தை சுத்தப்படுத்த வேண்டும் என்று நினைத்தீர்களா அது மாறநேர் நம்பி காலடி பட்டும், கரங்களின் தொடுதலாலும் சுத்தப்படுத்தப்பட்டுவிட்டது. இனி வேறு ஒரு சுத்தம் தேவையில்லை. எனவே நாளை நேரடியாகவே நாம் காலஷேபத்தை ஆரம்பித்து விடலாம்’’ என்று சொன்னாராம். காரணம் ஆளவந்தார் ஒரு அருளாளர். அப்படிதான் சொல்வார். எந்த ஒரு அருளாளர்களுக்கும் சில குணங்கள் இயற்கையாகவே
அமைந்திருக்கும்.
* யாரையும் புறக்கணிக்க மாட்டார்கள்.
* யாரையும் அவமானப்படுத்த மாட்டார்கள்.
* மூன்றாவதாக, யாரையும்
அவமானப்படுத்த விடமாட்டார்கள்.
‘‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’’ என்கின்ற வார்த்தைகள் பெரும்பாலும் ஒரு சடங்காக, நாவில் இருந்து மட்டும் உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அருளாளர்கள் அதை இதய சுத்தியோடு செயலில் வெளிப்படுத்துவார்கள். அப்படி யார் வெளிப்படுத்துகிறார்களோ, அவர்கள்தான் அருளாளர்கள். அப்படி வெளிப்படுத்திய அருளாளர்தான் ஆளவந்தார். இன்னும் சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.

தேஜஸ்வி

Related Stories: