லக்னோ: உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவி வகித்த நிலையில், அவருக்குப் பிறகு கடந்த நவம்பர் 24ம் தேதி புதிய தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றுக் கொண்டார். வரும் 2027ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி வரை இவர் பதவி வகிக்கவுள்ளார். நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகளை விரைந்து முடிப்பது மற்றும் சமரச மையங்களை ஊக்குவிப்பது ஆகியவற்றை தனது முக்கிய லட்சியமாகக் கொண்டு இவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் ஈட்டாவில் உள்ள இந்தி சேவா நிதி அறக்கட்டளையின் 33வது ஆண்டு விழா கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ‘மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; அது நமது சிந்தனையையும், மதிப்பீடுகளையும் வடிவமைக்கும் முக்கியமான ஊடகமாகும்.
உச்ச நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், சாமானிய மக்களும் நீதித்துறை நடவடிக்கைகளை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் தற்போது 16 இந்திய மொழிகளில் தீர்ப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வரு கின்றன. இதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு, மொழிபெயர்ப்பு பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. வருங்காலத்தில் அரசியலமைப்பு சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மொழிகளிலும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளையும், தீர்ப்புகளையும் கொண்டு சேர்ப்பதே எங்களின் இலக்காகும். இதன் மூலம் நீதித்துறைக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி குறையும்’ என்று தெரிவித்தார். முன்னதாக, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பணியாற்றியபோது, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீர்ப்புகள் மற்றும் உத்தரவுகளை இந்தி மொழியிலேயே வழங்கிய மறைந்த நீதிபதி பிரேம் சங்கர் குப்தாவிற்கு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தனது புகழஞ்சலியை செலுத்தினார்.
