கரூர், டிச. 22: தோட்டக்கலை துறை மூலம் மானிய விலையில் டிராகன் பழம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர்கூறியதவாது,
கரூர் மாவட்ட தோட்டக்கலை துறை மூலம் மானிய விலையில் டிராகன் பழம் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு. கரூர் மாவட்டத்தில் சுமார் 10 ஹெக்டர் பரப்பளவில் டிராகன் பழம் பயிரிடப்பட்டுள்ளது. டிராகன் பழம் சமீபத்தில் உலகளவில் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கற்றாழை வகையைச் சார்ந்தது. பழம் சற்று அமிலத்தன்மை கொண்டது மற்றும் வைட்டமின் சி நிறைந்த தாவரங்களில் ஒன்றாகும். பல ஊட்டச்சத்து நிறைந்த டிராகன் பழம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும், செரிமானத்திற்கு நல்லது மற்றும் இரும்புச்சத்து உள்ளதால் ரத்தச்சோகையை குணப்படுத்த உதவுகிறது.
டிராகன் பழம் நடவு செய்த முதல் வருடத்திலிருந்து மகசூல் கொடுக்கக் கூடியதாகும். இதன் ஆயுட்காலம் சுமார் 20 ஆண்டுகள் ஆகும். வருடத்திற்கு அதாவது, ஒரு செடிகளிலிருந்து சுமார் 5 கிலோ மகசூல் கிடைக்கும். ஒரு பழத்தின் எடை 300 முதல் 500 கிராம் வரை இருக்கும். நடவு செய்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு சராசரி பொருளாதார மகசூல் ஏக்கருக்கு 10 டன் வரை கிடைக்கும். தற்போது சந்தையில் ஒரு கிலோ பழம் சுமார் ரூ.100 விற்கப்படுகிறது. மேலும், பல்வேறு காலநிலைகளுக்கு ஏற்ப வளரும் டிராகன் பழத்தின் ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்த விழிப்புணர்வு வளர்ந்து வருவதால், விவசாயிகளுக்கு டிராகன் பழ விவசாயம் ஒரு சாத்தியமான மற்றும் நிலையான விவசாயமாக மாறி வருகிறது.
கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறை மூலம் அரவக்குறிச்சி, க.பரமத்தி, கடவூர், குளித்தலை மற்றும் தோகைமலை வட்டாரங்களில் டிராகன் பழம் பயிரிடப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் தோட்டக்கலை துறையில் பிரதம மந்திரி தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் டிராகன் பழம் சாகுபடி செய்ய ஹெக்டருக்கு ரூ.1,62,000 (40%) மானியம் வழங்கப்படுகிறது. எனவே, இத்திட்டத்தில் பயனடைய விவசாயிகள் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், இணையவழியாக பதிவு செய்ய https://www.tnhoriculture.tn.gov.in/tnhortnet/ வலைதளத்தை அணுகும்படி கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
