பந்தலூர்,டிச.22: பந்தலூர் அருகே சேலக்குன்னு பொன்னம்மா பள்ளம் பகுதிக்கு சாலை அமைத்துதர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட உப்பட்டி அருகே சேலக்குன்னு பொன்னமாபள்ளம் பகுதியில் பழங்குடியினர் மற்றும் தாயகம் திரும்பியோர் என 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். சேலக்குன்னு பகுதியில் இருந்து பொன்னம்மாபள்ளம் பகுதிக்கு சாலை வசதிகள் இல்லாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள இப்பகுதிக்கு சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி மக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதில்லை என தேர்தல் புறக்கணிப்பு செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
