×

மொத்த நன்கொடையில் 82 சதவீதம் பாஜ மட்டும் ரூ.3112 கோடி வசூல்: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: ஒன்பது கார்ப்பரேட் அறக்கட்டளைகள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு மொத்தம் ரூ.3811 கோடி நிதி வந்துள்ளது. அதில்,பாஜவுக்கு மட்டும் ரூ.3112 கோடி கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கும் தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் கடந்த 2024ம் ஆண்டு ரத்து செய்தது. அந்தத் திட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று கூறி தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது காசோலைகள் மற்றும் இணையவழி பரிவர்த்தனைகள் மூலம் மட்டுமே எந்தவொரு நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கும் நிதியளிக்க முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டது.

இந்த தடை நடைமுறைக்கு வந்த பிறகு முதல் நிதியாண்டான 2024-25ல் பதிவு செய்யப்பட்ட 9 கார்ப்பரேட் அறக்கட்டளைகள் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன. அந்த அறக்கட்டளைகள் மொத்தம் ரூ.3811 கோடி நிதி அளித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 2023-24 ம் ஆண்டில் வழங்கப்பட்ட ரூ.1218 கோடியுடன் ஒப்பிடுகையில் 200% அதிகம். அந்த அறிக்கையின் படி மொத்த நன்கொடையில் ஐந்தில் நான்கு பங்கு அதாவது 82 % ஆளும் பாஜவுக்கு சென்றுள்ளது. அக்கட்சிக்கு மட்டும் 3,112 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு வெறும் ரூ.299 கோடி மட்டுமே கிடைத்துள்ளது. இது மொத்த நிதியில் 8 % குறைவாகும். இதர அனைத்து கட்சிகளும் சேர்ந்து ரூ.400 கோடி பெற்றுள்ளன.

முக்கிய அறக்கட்டளைகள்
புரூடென்ட் தேர்தல் அறக்கட்டளை:பாஜவுக்கு மிக பெரிய நன்கொடையாளர்.இது பாஜவுக்கு ரூ. 2180 கோடியை அளித்துள்ளது. இந்த அறக்கட்டளை திரிணாமுல், ஆம் ஆத்மி, தெலுங்குதேசத்துக்கும் நிதியை வழங்கியது. பாஜ மட்டும் மொத்த நிதியான 2668 கோடியில் 82 % பெற்றுள்ளது.காங்கிரசுக்கு ரூ.21 கோடி அளித்துள்ளது.
புரோக்கிரஸ்ஸிவ் அறக்கட்டளை: இந்த அறக்கட்டளை நிறுவனங்களிடம் இருந்து ரூ.914 கோடியை வசூலித்தது. அதில் ரூ.757 கோடி (80 % )பாஜவுக்கு சென்றது. காங்கிரசுக்கு ரூ.77 கோடி வழங்கியுள்ளது.

புதிய ஜனநாயக தேர்தல் அறக்கட்டளை:மொத்தம் ரூ.160 கோடி வழங்கியதில் ரூ.150 கோடி பாஜவுக்கு கொடுத்துள்ளது. காங்கிரசுக்கு ரூ.5 கோடி வழங்கியுள்ளது. ஹார்மோனி தேர்தல் அறக்கட்டளை: பாஜவுக்கு ரூ.30 கோடி அளித்துள்ளது. காங்கிரசுக்கு நிதி அளிக்கவில்லை.

டிரையம்ப் தேர்தல் அறக்கட்டளை: பாஜவுக்கு ரூ. 21 கோடி அளித்துள்ள இந்த அறக்கட்டளை காங்கிரசுக்கு நிதி அளிக்கவில்லை. சமாஜ் தேர்தல் அறக்கட்டளை சங்கம்: பாஜவுக்கு ரூ.3 கோடி அளித்துள்ளது.

ஜன் பிரகதி தேர்தல் அறக்கட்டளை: ரூ.1 கோடி வசூலித்துள்ள இந்த அறக்கட்டளை பாஜ, காங்கிரசுக்கு நிதி அளிக்கவில்லை.
ஜன கல்யாண் அறக்கட்டளை: பாஜ மற்றும் காங்கிரசுக்கு தலா ரூ.9.50 லட்சம் அளித்துள்ளது. எயின்ஸிகார்டிக் அறக்கட்டளை: பாஜவுக்கு ரூ.7.75 லட்சம் அளித்துள்ளது.

ஜிண்டால் நிறுவனம்:
புரூடன்ட் அறக்கட்டளைக்கு ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர், மேகா இன்ஜினியரிங், பார்தி ஏர்டெல்,டோரண்ட் பார்மசூட்டிக்கல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்களித்துள்ளன.

டாடா நிறுவனங்கள்:
முற்போக்கு தேர்தல் அறக்கட்டளைக்கு டாடா சன்ஸ், டாடா ஸ்டீல் , டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட டாடா குழும நிறுவனங்கள் முக்கிய பங்களிப்பு செய்துள்ளன.

Tags : Election Commission ,New Delhi ,Bajaj ,Supreme Court ,
× RELATED சேலத்தில் எடப்பாடிக்கு செக்; செங்கோட்டையன் ஸ்கெட்ச்