×

லாட்டரி டிக்கெட் விக்குறவனுக்கு கட்சியில பொறுப்பு; விஜய் புரட்சி தளபதியா? வெட்கமா இல்லையா? செங்க்ஸை நறுக்.. நறுக்குன்னு கொட்டிய கே.பி.முன்ஸ்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி 250 பேர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

அவர்களை வரவேற்று அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியதாவது:
தனது ரசிகர்களை வைத்து புதிதாக கட்சி ஆரம்பித்தவர், தன்னுடைய கட்சியை தூய்மையான சக்தி என்கிறார். நீ எப்படி தூய்மையான சக்தி ஆக முடியும்? நீ இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. உன்னுடைய நடவடிக்கைகள் என்னவென்று தெரியாது. உன்னுடைய ரசிகர்களுடன் கட்சி ஆரம்பித்தாய். இப்போது பல்வேறு கட்சிகளில் இருந்து, உன்னுடைய கட்சிக்கு வந்திருக்கிறார்கள். அதனால் அது தூய்மையான கட்சி அல்ல. கலப்பட கட்சி. எப்படி சொல்கிறேன் என்றால், உன்னுடைய கட்சியின் பொதுச்செயலாளர் யார்? ஆதவ் அர்ஜூனா இந்தியா முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பவர். ஏற்கனவே ஒரு கட்சியில் இருந்த அவர், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சென்றார். அங்கு சண்டையை மூட்டியதால், வெளியே வந்தார். அதன் பிறகு பல கட்சிகளுக்கு போக பார்த்தார். பின்னர், உன்னுடைய கட்சிக்கு வந்து விட்டார்.

அதிமுகவுக்கும் அவர் வர பார்த்தார். நம்ம கட்சியில் இருந்து ஒரு ஆள் சென்றிருக்கிறார், அவர் செங்கோட்டையன். செங்கோட்டையனை யாருக்கு தெரியும்? அவர் அமைச்சராக யார் காரணம்?. 50 ஆண்டுகள் இந்த கட்சியில் பல்வேறு வசதி வாய்ப்புகளையும், பதவி சுகத்தையும் அனுபவித்து, பொருளாதாரத்தில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல யார் காரணம்?. பல கல்லூரிகளையும், நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் சம்பாதிக்க இந்த கட்சி தான் காரணம். அப்படி இருக்கும் போது, இந்த கட்சிக்கு பல்வேறு இடையூறுகளை செய்தார். பொது இடத்தில் கட்சி தலைமைக்கு கெடு விதித்தால் யார் ஏற்பார்கள்?, கட்சி தலைமைக்கு கெடு விதித்தால், அந்த கட்சி கட்டுக்கோப்பாக இருக்குமா? கட்சி தானாக உடைந்து விடாதா? கட்சி கட்டுப்பாடுகளை மீறியதால், வேறு வழியின்றி கட்சியில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.

இப்போது, அங்கு சென்று புரட்சி தலைவர் எம்ஜிஆருக்கு அடுத்து புரட்சி தளபதி விஜய் என்று சொல்கிறாய். வெட்கமாக இல்லையா?. உன்னுடைய கட்சிக்கு பல்வேறு கட்சிகளில் இருந்து சந்தர்ப்பவாதிகள் தான் வந்திருக்கிறார்கள்.இவ்வாறு கே.பி.முனுசாமி பேசினார்.

உன்னையும் காலி பண்ணுவாங்க.. விஜய்க்கு அலர்ட்
‘எங்கே இடம் கிடைக்கும்?, எங்கே வசதி வாய்ப்பு கிடைக்கும்?, தலைமை பொறுப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து தவெகவுக்கு வந்திருக்கிறார்கள். அதனால் தான் உன்னுடைய கட்சியை கலப்பட கட்சி என்கிறேன். ஆதவ் அர்ஜூனா பல கட்சியில் இருந்து வந்தவர். இன்னொருவர் பாஜவில் இருந்து வந்தவர். செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வந்தவர். நாளை உன்னையும் காலி செய்து விட்டு வேறு பக்கம் சென்று விடுவார்கள். அதனால் நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்று கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

Tags : Vikkuravan ,Vijay ,K.P. Munus ,Thenkanikottai ,Krishnagiri district ,AIADMK ,Deputy General Secretary ,K.P. Munusamy ,MLA ,
× RELATED சேலத்தில் எடப்பாடிக்கு செக்; செங்கோட்டையன் ஸ்கெட்ச்