தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299 போலீஸ் எஸ்ஐ பணியிடங்களுக்கு தேர்வு: 1.78 லட்சம் பேர் ஆர்வமுடன் எழுதினர்

 

சென்னை: தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 46 மையங்களில் 1.78 லட்சம் பேர் இன்று ஆர்வமுடன் தேர்வு எழுதினர். தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான நேரடித் தேர்வு 2025ம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை ஊதிய விகிதம் கொண்ட இந்தப் பணியிடங்களுக்கான இணையவழி விண்ணப்பப்பதிவு கடந்த ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே 3ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் காவல் உதவி ஆய்வாளர் (தாலுகா) பிரிவில் ஆண்கள் 654, பெண்கள் 279 என மொத்தம் 933 இடங்களும், ஆயுதப்படை பிரிவில் ஆண்கள் 255, பெண்கள் 111 என மொத்தம் 366 இடங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன. மொத்தமுள்ள 1,299 பணியிடங்களில் ஆண்களுக்கு 909 இடங்களும், பெண்களுக்கு 390 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு இளங்கலைப்பட்டம் முடித்தவர்களும், 20 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்ததால், பொறியியல் பட்டதாரிகள் உட்பட 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பிறகு தகுதியுடைய 1.78 லட்சம் பேருக்குத் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 38 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த 46 தேர்வு மையங்களில் இன்று எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்காகத் தேர்வு மையங்களுக்குக் காலை 6 மணி முதலே தேர்வர்கள் வரத் தொடங்கினர். காலை 8 மணி முதல் 9.30 மணி வரை பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், தேர்வர்களைத் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர்.

கைக்கடிகாரம், செல்போன், கால்குலேட்டர் மற்றும் ‘ஸ்மார்ட் வாட்ச்’ உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை முதன்மைத் தேர்வும், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.10 மணி வரை தமிழ் தகுதித் தேர்வும் நடைபெற்றது. இத்தேர்வை நிறைமாத கர்ப்பிணிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வந்திருந்த பெண்கள் பலரும் ஆர்வமுடன் எழுதினர்.

சென்னையைப் பொறுத்தவரை கிண்டி அழகப்பா பொறியியல் கல்லூரி, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி உள்ளிட்ட 22 மையங்களில் 21,069 பேர் தேர்வு எழுதினர். பாதுகாப்புப் பணிக்காகத் துணை ஆணையர்கள் தலைமையில் 2,677 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். தேர்வு அறைகள் அனைத்தும் ‘சிசிடிவி’ கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. காலை 9.30 மணிக்கு மேல் வந்தவர்களுக்குத் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் தேர்வு மையங்களைச் சுற்றிப் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

Related Stories: