டெல்லி: கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி சட்டம். மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு மாற்றாக விக்ஷித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவை நிறைவேற்றியது பாஜக.
மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக மோடி அரசு கொண்டுவந்த விக்சித் பாரத் ஜி ராம்-ஜி (VBGRAMG) மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 100 நாள் வேலைத் திட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் மசோதா என எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.
மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்திற்கு (MGNREGA) மாற்றாக மோடி அரசு கொண்டுவந்த விக்சித் பாரத் ஜி ராம்-ஜி (VBGRAMG) மசோதாவில், மகாத்மா காந்தியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும், 40% நிதியை மாநில அரசுகள் மீது திணிக்கும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், இந்த மசோதா ஆண்டுதோறும் 60 நாட்கள் வேலை நிறுத்தத்தை விவசாய காலம் என்ற பெயரில் கட்டாயப்படுத்துகிறது. வேலை நாட்களை 100-இலிருந்து 125 நாட்களாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வேலை அட்டைகளை முறைப்படுத்துவதாக கூறி, இந்த இந்த மசோதா கிராமப்புறக் குடும்பங்களில் பெரும் பகுதியினரைத் திட்டத்திலிருந்து வெளியேற்றுவதற்கு வழிவகுத்திருக்கிறது.
60 நாட்கள் வரை வேலைவாய்ப்பை நிறுத்தி வைக்க அரசாங்கங்களை அனுமதிக்கும் இந்த விதிமுறை, கிராமப்புறக் குடும்பங்களுக்கு வேலை மிகவும் தேவைப்படும் நேரத்தில் அதை மறுத்து, அவர்களை நிலப்பிரபுக்களைச் சார்ந்திருக்கச் செய்யும் வகையில் மாற்றப்பட்டிருக்கிறது.
பணியிடத்தில் டிஜிட்டல் வருகையைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கு வது, வேலையிழப்பு மற்றும் உரிமைகள் மறுக்கப்படுவது போன்ற பெரும் சிரமங்களை கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்துவதாக உள்ளது என சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, மசோதா நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.
இந்நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தின் மாற்று மசோதாவான விஷித் பாரத் ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சட்டப்படி ஊரக வேலை திட்டத்துக்கான செலவில் 40%ஐ மாநில அரசுகள் ஏற்க வேண்டும். அறுவடைக் காலம் என வரையறுக்கப்பட்ட 60 நாட்களுக்கு ஊரக வேலைத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படமாட்டாது. மாநிலங்கள் 40 சதவீதம் நிதியளிக்க வேண்டும் என்ற நிபந்தனையால் மாநில உரிமைகள் பறிபோவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
