×

நெல்லை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று ரூ.696 கோடிக்கு திட்டங்கள் முதல்வர் அர்ப்பணித்தார்: 45 ஆயிரம் பேருக்கு நல உதவிகளையும் வழங்கினார்

 

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடந்த விழாவில் நெல்லை மாவட்டத்திற்கு ரூ.696 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார். விழாவில் 45 ஆயிரம் பேருக்கு ரூ.101 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.நெல்லை மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்தார். அவருக்கு திமுகவினரால் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது வேனில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் அளித்த உற்சாக வரவேற்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் ெநல்லை வண்ணாரபேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து விட்டு மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தார்.பின்னர் மாலை 5 மணிக்கு வண்ணார்பேட்டையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நெல்லை டக்கரம்மாள்புரத்தில், ெதன்னிந்திய திருச்சபை நெல்லை திருமண்டலத்தின் சாராள் தக்கர் கன்வென்ஷன் சென்டர் பிரதான நுழைவு வாயிலை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்குள்ள தரிசனபூமியில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்திய மனித நேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழாவில் பங்கேற்றார்.

பின்னர் இரவு 8 மணிக்கு நெல்லை ரெட்டியார்பட்டி மலைச்சாலையில் தமிழர்களின் தொன்மையை பறைசாற்றும் வகையில் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்ட பொருநை அருங்காட்சியத்தை திறந்து வைத்து ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என அமைக்கப்பட்டுள்ள தனித்தனி வளாகங்கள், அகழாய்வின் போது கிடைத்த பொருட்கள், தமிழர்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வீடியோக்கள், அதற்காக அமைக்கப்பட்டுள்ள திரையரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டார். இரவு வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி ஓய்வெடுத்தார்.

இன்று 21ம் தேதி (ஞாயிறு) காலை 9 மணிக்கு நெல்லை வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 9.30 மணிக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழா பந்தலுக்கு வந்தார். அங்கு நெல்லை மாவட்டத்திற்கு புதிய அரசு பஸ் வழித் தடங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர்களை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ.182.74 கோடியில் முடிவடைந்த 32 திட்டப் பணிகளை துவக்கி வைத்ததோடு, ரூ.357 கோடி மதிப்பில் 11 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ஏழை, எளியவர்களுக்கு ரூ.101 கோடியே 48 லட்சம் மதிப்பில் 44 ஆயிரத்து 924 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இந்த விழாவில் மட்டும் மொத்தம் ரூ.696 கோடி மதிப்பிலான திட்டங்களை நெல்லை மாவட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அர்ப்பணித்தார். இதற்காக 30 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட விழா பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த விழா பந்தலுக்கு முதல்வர் வரும் வழியெங்கும் வாழைத் தோரணங்கள் குலை வாழைகளுடன் கட்டப்பட்டிருந்தது. முதல்வரை விழா பந்தலுக்கு செண்டை மேளம் அடித்து வரவேற்றனர். விழா நுழைவாயிலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நடந்து வருவது போன்ற பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. முன்னதாக முதல்வரை நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கேஎன் நேரு தலைமையில் திமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். விழா முடிந்ததும் 12 மணிக்கு கார் மூலம் தூத்துக்குடி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Tags : Chief Minister of Programmes ,Nella Medical College Ground ,Nella ,Nella State Medical College Ground ,Chief Minister of India ,PMC ,Nella District ,K. Stalin ,Chief Minister ,K. ,Stalin ,Rice ,
× RELATED டிசம்பர் 26ம் தேதி முதல் 215 கி.மீ.க்கு...