×

நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க துடிக்கிறார்கள் பாஜவின் சதி திட்டத்தை திடமுடன் எதிர்ப்போம்: நெல்லை கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

நெல்லை: நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க துடிக்கிறார்கள். பாஜவின் சதி திட்டத்தை திடமுடன் எதிர்ப்போம் என்று நெல்லை கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், அங்கிருந்து நெல்லை சென்றார். கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் தென்னிந்திய திருச்சபை திருநெல்வேலி திருமண்டலம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாளை. சாராள் தக்கர் கன்வென்ஷன் சென்டர் நுழைவாயில் திறப்பு விழா ஆகிய இருபெரும் விழாக்கள் நெல்லை டக்கரம்மாள்புரம் தரிசனபூமியில் நேற்றிரவு நடந்தது.

விழாவிற்கு தலைமை வகித்து கிறிஸ்துமஸ் கேக் வெட்டி மும்மத தலைவர்களுக்கும் ஊட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவரும் ஒரு தாய் வீட்டுப் பிள்ளைகளாக வாழ வேண்டும். இது போன்ற விழாக்கள் அதற்கு துணை நிற்க வேண்டும். மதசார்பின்மை, மத நல்லிணக்கத்தை விரும்புவர்கள் உங்களுக்கு துணையாக எப்போதும் பாதுகாப்பாக இருப்போம். என்றைக்கும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். திமுக தான் சிறுபான்மையினர் மீது அக்கறை கொண்டுள்ள இயக்கம். சிறுபான்மையினருக்கு பொற்காலம் என சொல்லும் ஏராளமான திட்டத்தை கொடுத்துள்ளது. இது சிலரது கண்களை உறுத்துகிறது. எப்படி தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்கலாம்.

ஒன்னுக்குள் ஒன்னாக பழகும் மக்களை எதிரிகளாக பிரிக்க சிலர் யோசிக்கிறார்கள். ஆன்மிகத்தின் பெயரால் சில அமைப்புகள் அழைத்துச் செல்ல நினைக்கும் வழி வன்முறைக்கான பாதை என்பதை தமிழகம் உணர்ந்துள்ளது. சகோதரத்துவத்தையும், பகுத்தறிவையும் உணர்த்தும் மாநிலமாக உள்ளது தமிழ்நாடு. எல்லோருக்கும் எல்லாம் என்ற இயேசுபிரான் வார்த்தைக்கு இலக்கணமாக திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறோம். எந்த மதத்தை சார்ந்தவர்களாக இருந்தாலும் மதத்தின் பெயரால் உங்கள் உணர்வை தூண்டினால் அவரை சந்தேகப்படுங்கள், கவனமாக இருங்கள். குடியுரிமை திருத்தச்சட்டம் கொண்டு வந்த போது திமுக மூலம் கடுமையான போராட்டம் நடத்தப்பட்டது.

துரோகம் செய்வதையும் மக்கள் நலனை அடகு வைப்பதை மட்டுமே லட்சிய அரசியலாக எடுத்துச் செல்லும் அதிமுக அந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது. மத்திய பாஜவை பொருத்தவரை மதசார்பின்மை என்ற வார்த்தை வேப்பங்காயை சாப்பிட்டது போல் கசக்கிறது. அதனை அரசியலமைப்பு சட்டத்திலிருந்து நீக்க துடியாய் துடிக்கிறார்கள்.நாட்டின் பன்முக தன்மையை சிதைத்து ஒரே தேர்தல், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற எதேச்சதிகார எதிர்காலத்தை உருவாக்க நினைக்கிறார்கள். தமிழகத்திலும் அவர்களது பிளானை செயல்படுத்த நினைக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதை எதிர்த்து முறியடிப்போம். இப்படிப்பட்ட ஆபத்தையும், பாஜவின் நாசகார திட்டத்தையும் எதிர்த்து நிற்கும் வலிமை தமிழகத்திற்கும், திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் உண்டு. இதுதான் நமது ஸ்டைல். இவ்வாறு அவர் பேசினார்.

* 4 முக்கிய அறிவிப்புகள்
கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகள்:
* சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் தேர்வு கமிட்டியில், அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மட்டுமே இருந்து ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அரசாணையில் கையெழுத்திட்டுத் தான் இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன்.
* ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், மூக்கையூர் கிராமத்தில் இருக்கின்ற தொன்மை வாய்ந்த புனித யாக்கோபு தேவாலயம், ஒரு கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
* ஆசிரியர் தகுதித் தேர்வு பிரச்னையில், சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சந்திக்கும் சிரமங்களைப் பற்றி என்னிடம் நேரடியாக கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து, அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினேன். அரசு வழக்கு விசாரணையை நீட்டிப்பதற்குப் பதிலாக, இந்த விவகாரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்றோம். இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான அரசியலமைப்புச் சட்ட கேள்வி குறித்து, உச்ச நீதிமன்றம் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஆராய உத்தரவிட்டிருக்கிறது. இந்த அணுகுமுறையால், சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 1,439 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியோடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
* புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே நியமிக்கப்பட்ட 470 ஆசிரியர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் ஆணை.

* ‘ஓட்டுரிமை தடுக்கும் பாஜ முறியடித்து வெற்றி பெறுவோம்’
‘எஸ்ஐஆர்ஐ பொறுத்தவரை நமது பணிகள் இன்னும் முடியவில்லை. உங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டிருந்தால் திமுக நிர்வாகிகள் உங்களது வீடு தேடி வருவார்கள். வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க உதவிகளை அவர்கள் செய்வார்கள். நீங்கள் கவலைப்பட வேண்டாம். நம்மை வாக்களிக்க விடாமல் தடுப்பதற்கு பல்வேறு பணிகளை பாஜ அரசு செய்யும். ஆனால் அதையெல்லாம் முறியடித்து நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். உங்களது நலனையும், உரிமையையும் பாதுகாக்க திமுகவும் திராவிட மாடல் அரசும் என்றும் துணை நிற்கும், நீங்களும் எப்போதும் எங்களுக்கு துணை நிற்க வேண்டும்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : Bajaj ,PM ,Paddy ,Christmas ,K. Stalin ,Nella Christmas ceremony ,Nella district ,Chief Minister ,Chennai ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...