சென்னை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையின் மூலமாக 97,37,832 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பெயர் விடுபட்டவர்கள், மீண்டும் சேர்க்க ஜனவரி 18ம்தேதி வரை அவகாசம் உள்ளது. இன்றும் நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு உட்பட மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முதல்கட்டமாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர் பணிகளில் பல குளறுபடிகள் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அதிமுகவும் பாஜவும் ஆதரவு தெரிவித்தன. பல்வேறு குழப்பங்களுக்கு நடுவில் தமிழகத்தில் கடந்த மாதம் முதல் இந்தப்பணி தொடங்கியது. தேர்தல் ஆணையம் மற்றும் கட்சி நிர்வாகிகள், இந்த பணிகளை மேற்கொண்டனர்.
முதலில் கடந்த 11ம் தேதி வரை எஸ்ஐஆர் படிவங்கள் பெறும் பணி நடந்து வந்தது. அன்றைய தினம் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த காலக்கெடு முடிவடைய இருந்தது. இந்நிலையில், படிவங்களை திருப்பி வழங்குவதற்கான கால அவகாசம் டிச.14ம் தேதி வரை நீடிக்கப்பட்டது. இதையடுத்து வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை 100 சதவீதம் வழங்கி, அவற்றை திரும்பவும் பெற்று விட்டனர். இந்த படிவங்களை வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் ஏற்கனவே பதிவேற்றம் செய்து விட்டனர். தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட படிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாட்டிற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5,43,76,755 ஆக உள்ளனர்.
அதில் 2,66,63,233 ஆண் வாக்காளர்கள், 2,77,60,332 பெண் வாக்காளர்கள், 7,191 மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் 4,19,355 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 15.18 சதவீதம் ஆகும். சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 14,25,018 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 பெயர்களும், 3வதாக கோவை மாவட்டத்தில் 6,50,590 பெயர்களும், 4வதாக திருப்பூர் மாவட்டத்தில் 5,63,785 பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்கு மீண்டும் பெயர் சேர்க்க மற்றொரு வாய்ப்பும் உள்ளது. புதிய வாக்காளர் விண்ணப்பத்திற்கு படிவம் 6ஐ பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு ஜனவரி 18ம்தேதி வரை அவகாசம் உள்ளது.
வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் இரண்டுக்கும் விண்ணப்பிக்க முடியும். பட்டியலில் உள்ள பெயர்களுக்கு மறுப்பு தெரிவித்தும் புகார் அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஜனவரி 18க்கு பிறகு இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அதன்படி, தகுதியான வாக்காளர்களை பட்டியல் சேர்க்கப்படுவார்கள். பின்னர், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17ம் தேதி வெளியிடப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்கவும், போட்டியிடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றும் நாளையும் சிறப்பு முகாம் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாத வாக்காளர்கள், 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்களுக்காக இன்று, நாளை என 2 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், தங்களது படிவங்களை பூர்த்தி செய்து, இந்த முகாம்களில் வழங்கலாம் என்றும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
