புதுடெல்லி: முட்டைகளுக்கும் புற்றுநோய் அபாயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) திட்டவட்டமாக கூறி உள்ளது. இந்தியாவில் விற்கப்படும் முட்டைகள் சாப்பிடுவதால் புற்றுநோய் வரும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் கர்நாடகாவில் கசிந்த தகவல் நாடு முழுவதும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் முட்டைகளை ஆய்வு செய்ததில் அந்த முட்டைகளை இட்ட கோழிகளின் எச்சங்களில் தீங்கு விளைவிக்கக் கூடிய நைட்ரோபியூரான் ஆன்டிபயாடிக் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியானது.
இந்நிலையில், இந்த தகவலை எப்எஸ்எஸ்ஏஐ திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் எப்எஸ்எஸ்ஏஐ கூறியிருப்பதாவது: இந்தியாவில் விற்கப்படும் முட்டைகள் உண்பதற்கு பாதுகாப்பானவை. அதில் புற்றுநோய் உண்டாக்கும் பொருட்கள் இருப்பதாக கூறும் அறிக்கைகள் அறிவியல் அடிப்படை ஆதாரமற்றவை. நைட்ரோபியூரான் என்பது ஆடு, கோழி போன்ற உணவுக்காக வளர்க்கப்படும் உயிரினங்களுக்கு தரப்படும் ஆன்டிபயாடிக் மருந்து இது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் விதிமுறைகள் 2011ன் கீழ் கோழி மற்றும் முட்டை உற்பத்தியின் அனைத்து நிலைகளிலும் நைட்ரோபியூரான் பயன்பாடு கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
நைட்ரோபியூரான் மெட்டாபோலைட்களுக்கு ஒரு கிலோவுக்கு 1.0 மைக்ரோகிராம் என்ற அதிகபட்ச எச்ச வரம்பு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ஒழுங்குமுறை அமலாக்க நோக்களுக்காக மட்டுமே தவிர அந்த பொருளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டளதாக அர்த்தமில்லை. இந்த அதிகபட்ச வரம்புக்கு கீழே உள்ள மிகச்சிறிய எச்சங்கள் கண்டறிவது உணவுப் பாதுகாப்பு மீறலாகாது. அது எந்தவொரு சுகாதார அபாயத்தையும் குறிக்கவில்லை. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
