தைபே: தைவான் மெட்ரோ ரயில் நிலையத்தில் மர்ம நபர் கத்தியால் குத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர. 11 பேர் காயமடைந்தனர். தைவான் தலைநகர் தைபேவில் வசித்து வந்த நபர் சாங் வென்(27) நேற்று பிற்பகல் முதல் தொடர் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளார். முதலில் சாலையில் தீ வைத்த அந்த நபர், சாலையில் சென்ற கார்கள், இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தினார். பின்னர் தான் வசித்து கொண்டிருந்த வீட்டுக்கும் தீ வைத்துள்ளார்.
அதைத்தொடர்ந்து தைபேவில் உள்ள பிரதான மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்ற அவர், அங்கிருந்த பயணிகளை கத்தியால் குத்தினார். தொடர்ந்து சுரங்கப்பாதைகளுக்குள் தீ வைத்து விட்டு வௌியேறினார். இந்த தாக்குதல்களில் 3 பேர் பலியாகினர். 11 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே அந்த மர்ம நபரை காவல்துறையினர் துரத்தி சென்றனர். அப்போது ஒரு வணிக வளாகத்தின் நான்காவது மாடிக்கு சென்ற அவர் அங்கிருந்து கீழே குதித்ததில் உயிரிழந்தார்.
