×

இந்த வார விசேஷங்கள்

20.12.2025 – சனி திருஅத்யயன உற்சவம் ஆரம்பம்

ஆழ்வார்களின் தீந்தமிழ்ப் பாடல் களைப் போற்றி, பெருமாளுக்கு அர்ப்பணிக்கும் வைபவமே திருஅத்யயன உற்சவம். திருவரங்கம், திருமலை திருப்பதி, ஆழ்வார்திருநகரி, திருக்குறுங்குடி போன்ற அனைத்து வைணவ திவ்ய தேசங்களிலும் இந்த வைபவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தில், வைகுண்ட ஏகாதசிக்கு முன்னும் பின்னும், சுமார் 20 நாட்கள் இந்த வைபவம் நடைபெறும். வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய 10 நாட்கள், பெருமாளின் அலங்கார சேவையும், திவ்யப் பிரபந்தங்களின் முதல் பகுதி பாராயணமும் நடைபெறும். இதை பகல் பத்து என்பர். வைகுண்ட ஏகாதசிக்குப் பிந்தைய 10 நாட்கள் திருவாய்மொழித் திருவிழாவாக நடைபெறும். திருவாய்மொழி பாசுரங்கள் இரவு நேரத்தில் பாராயணம் செய்யப்படும். இது தமிழ் வேத பாராயண உற்சவமாகும். அதன் தொடக்க நாள் இன்று.

21.12.2025 – ஞாயிறு சாக்கிய நாயனார் குருபூஜை

சாக்கிய நாயனாரைப் பற்றி, சுந்தரர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். ‘‘வார் கொண்ட வனமுலையாள் ஒரு உமைபங்கன் சூழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன்’’ என்று சுந்தரர் திருத்தொண்டத் தொகையில் பாடுகிறார். சாக்கியநாயனார் தன்னை மறந்த நிலையில் சிவனை வழிபட்டவர். திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். முதலில் பவுத்த நெறியில் இருந்தார். சிவபெருமான் திருவருள் கைகூட சிவ நன்நெறியே பொருள் எனும் நல்லுணர்வு கை வரப்பெற்றார். இறைவனுக்குத் திருமேனியாகிய சிவலிங்கத்தின் பெருமையுணர்ந்து நாள்தோறும் இறைவனை வழிபட்ட பின்னரே உண்ணுதல் வேண்டும் என உறுதி கொண்டார். இதனால், பௌத்தத் துறவிக் கோலத்தை (சாக்கியர் கோலம்) மாற்றாமல் ஒரு பொட்டலில் இருந்த சிவலிங்கத்தைச் சிறு கல்லால் எறிந்து அக்கல்லை மலர்போலப் பாவித்துப் பூசை செய்து வந்தார். சிவலிங்க பூசை செய்த பிறகு உணவு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது சாக்கியரின் உறுதி ஆகும். இவ்வாறு நாள்தோறும், (பௌத்தர்கள் அறியாதவாறு) சிறு கல்லை, மலர் போலப் பாவித்து சிவலிங்க வழிபாடு செய்த சாக்கியரின் செயலைக்கண்ட பௌத்தர்கள் சிவலிங்கத்தைப் பௌத்தத் துறவி கல்லால் எறிகிறார் என்று எண்ணி மகிழ்ந்தனர். சாக்கியர் செய்த இச்செயல் சிவபெருமானுக்கு உவப் பாயிற்று. அவர் அன்பினால் எறிந்த கற்களை நறுமலர்களாகவே ஏற்றுக்கொண்டார். மறுநாள் அங்கு வந்தபொழுது முதல்நாள் தாம் சிவலிங்கத் திருமேனியின் மேல் செங்கல் எறிந்த குறிப்பினை எண்ணி, ‘நேற்று இந்த எண்ணம் நிகழ்ந்தது இறைவன் திருவருளே’ என்று துணிந்து அதனையே தாம் செய்யும் வழிபாடாகக் கருதி எப்பொழுதும் அப்படியே செய்து வந்தார். ஒருநாள் சாக்கியர் அச்செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம்பெருமானைக் கல்லால் அர்ச்சனை செய்ய மறந்து விட்டேனே என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஆராத காதலால் கண்ணீர் வழிய ஒரு கல்லை எடுத்து எறிந்தார். சிவபெருமான் விடைமீது உமையம்மையாருடன் தோன்றி அருளினார். அத்தெய்வக் காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். சாக்கிய நாயனார் குரு பூஜை (மார்கழி பூராடம்) இன்று.

23.12.2025 – செவ்வாய் திருவோண விரதம்

ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விசேஷமான திருமஞ்சனங்கள் உண்டு. ஒப்பிலியப்பன் கோயிலில் சிரவணத்திற்கு கிரிவலம் போல பிரதட்சணம் உண்டு. அன்று விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்தால் ‘‘திரு’’ என்று சொல்லக்கூடிய அத்தனைச் செல்வங்களும் நீங்காது நிலைத்திருக்கும். திருவோண விரத தினத்தில் காலையில் எழுந்து குளித்து பெருமாள் ஆலயத்துக்கு சென்று துளசி மாலை சாற்றி தரிசித்து வரவேண்டும். காலையில் துளசி தீர்த்தம் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். பெருமாள் பாடல்கள், ஆழ்வார் பாசுரங்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தல் வேண்டும். மழலை செல்வம் இல்லாதவர்களுக்கு அழகான குழந்தை பாக்கியம் கிட்டும். விரத நாள் அன்று சந்திரதோஷம் விலக மாலையில் சந்திரனை தரிசிக்க வேண்டும். இப்படிச் செய்தால் சந்திரனின் முழு அருள்கிடைப்பதோடு, சந்திரதோஷம் இருந்தால் நிவர்த்தி ஆகும். நல்ல இனிமையான வாழ்க்கை அமையும்.

24.12.2025 – புதன் சதுர்த்தி

குறிப்பாக சந்திரனும் கேதுவும் இணைந்த ஜாதகத்தில் எப்பொழுதும் சிந்தனையில் தடைகள் இருந்து கொண்டே இருக்கும் குழப்பமான சிந்தனைகள் நிலவும். காரியங்களை மாற்றி மாற்றி செய்து கொண்டே இருப்பார்கள். சந்திரன் கேது இணைப்பில் உள்ளவர்கள், சந்திர தசை, கேது திசை நடப்பவர்கள், எந்த திசை நடந்தாலும் சந்திர புத்தி, கேது புத்தி இருப்பவர்களுக்கு, இந்த விரதம் நல்ல பலன் அளிக்கும். இதற்கு சாத்திரங்களில் 2 வழிபாடுகள் பரிந்துரைக்கப்பட்டு இருக்கின்றன.
1. கேது நட்சத்திரத்துக்கு உரிய தோஷங்களை நீக்கும் விநாயகர்
வழிபாடு.
2. கேதுவின் நட்சத்திரங்களில் ஒன்றான மூல நட்சத்திரத்தில் அவதரித்து தடைகளை உடைத்த காரிய சித்தி பெற்ற ஆஞ்சநேயர் வழிபாடு.
இன்று விநாயகரை வழிபடவேண்டிய சதுர்த்தி. சதுர்த்தி திதியில் விநாயகருக்கு விரதமிருந்து அருகம்புல் சாற்றி அப்பம், அவல், பொரி, கொழுக்கட்டை படைத்து வழிபடவேண்டும். அதன் மூலமாக எல்லாவிதமான துன்பங்களையும் அவர்களைவார். மன எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார். சதுர்த்தி வழிபாடு முடிந்த கையோடு வானத்தில் சந்திரனைப் பார்த்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அறிவாற்றல் வளர்ந்து சுபகாரியத் தடைகள் விலகும்.

25.12.2025 – வியாழன் நகரத்தார் பிள்ளையார் நோன்பு

தொன்றுதொட்டு நகரத்தார் பிள்ளையார் நோன்பு நோற்று வருகின்றனர். ஒவ்வொரு சமூகமும் அதற்குரிய அடையாளங்களோடு சில விரதங்களையும் விழாக்களையும் கொண்டாடி
வருகின்றனர். அப்படி குறிப்பிடத்தக்க ஒரு நோன்புதான் நகரத்தாரால் கொண்டாடப்படும் பிள்ளையார் நோன்பு. கார்த்திகை மாதம் சஷ்டி திதி சதய நட்சத்திரம் கூடிய நாளில் பிள்ளையார் நோன்பு கடைப் பிடிக்கப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கு அடுத்த நாள் ரோகிணி நட்சத்திரத்தில் இந்த நோன்பு தொடங்கி சதய நட்சத்திரம் அன்று நிறைவுபெறும். இதுகுறித்த செவிவழிச் செய்தி ஒன்றும் உண்டு.
நகரத்தார்கள் காவிரிப்பூம் பட்டினத்தில் வணிகச் செல்வர்களாக விளங்கிய காலம். வியாபார விஷயமாக வணிகம் செய்து கொண்டிருந்த போது ஒரு கார்த்திகை தீபம் அன்று அவர்களுடைய கப்பல் கடலில் புயலில் மாட்டிக்கொண்டது. தங்கள் குலதெய்வமான மரகதப் பிள்ளையாரை நினைத்து வேண்டினர். சூறாவளியில் சிக்கினாலும் எந்த ஆபத்தும் இன்றி கப்பல் அங்கு மிங்கும் தடுமாறி 21 நாள்கள் கழித்து ஒரு தீவின் கரையை அடைந்தது. அன்றைய தினம் சஷ்டி திதி சதய நட்சத்திரம். அங்கேயே அவர்கள் நேர்த்திக்கடனாக தாங்கள் கொண்டு வந்திருந்த அரிசி மாவு, நெய், வெல்லம், முதலிய பொருள்களைக் கலந்து மாவுப் பிள்ளையார் பிடித்து, 21 நாட்களுக்கு, ஒரு நாளுக்கு ஒரு நூலாக 21 நூல்களை திரியாகத் திரித்து தீபம் ஏற்றினர்.அதன் பிறகு சொந்த ஊர் அடைந்து தங்களுடைய அனுபவங்களை மற்றவர்களிடம் சொல்லி பிள்ளையாருக்கு இனி ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திற்கு இருபத்தோராம் நாள் சஷ்டி திதியும் சதய நட்சத்திரமும் கூடும் நாளில் ஆவாரம்பூ அரிசிமாவு பிள்ளையாரும் புத்தம்புது வேஷ்டியில் நூலில் செய்யப்பட்ட திரியையும் கொண்டு விளக்கு ஏற்றி வணங்குவார்கள். பிறகு அந்த மாவு பிள்ளையாரை பிரசாதமாக உண்டு மகிழ்வார்கள். இன்று கார்த்திகை தீபத்திற்கு அடுத்த தேய்பிறை சஷ்டி, சதய நட்சத்திரம்.

25.12.2025 – வியாழன் மகா வியதிபாதம்

மார்கழி மாதத்தில் வரும் வியதீபாத யோகம் ‘‘மஹா வியதீபாதம்’’ என அழைக்கப்படுகிறது. இது மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் என்று அழைக்கப்படும் யோகாக்களைப் பற்றி மட்டுமே நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு பஞ்சாங்கத்திலும் அன்றைய ‘‘யோகா’’விற்கு ஒரு தனி பத்தி உள்ளது. 27 யோகங்கள் உள்ளன, அவற்றில் ‘‘வியாதிபதயோகம்’’ மிக முக்கியமான யோகங்களில் ஒன்றாகும். வியதிபாத நாளில் இந்த நாட்களில் புனித நதியில் நீராடி திலஹோமம் (ஆத்ம சாந்தி பிரார்த்தனை) செய்தால், ஒருவர் தனது அனைத்து பாவங்களையும் அழித்து, வாழ்க்கையில் உள்ள தடைகளைத் தாண்டலாம். முன்னோர்களுக்கு ஆத்மசாந்தி பிரார்த்தனை, தியானம், ஜெபஹோமங்கள் போன்ற சடங்குகள் நல்ல பலனைத் தரும். ஏழைகளுக்கு உணவளிப்பது குடும்பத்தில் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரும். புனித நதியில் நீராடி, தெய்வங்களுக்கு பூஜை மற்றும் அபிஷேகம் செய்வது செழிப்பைத் தரும். இந்த நாளில் சிவன் கோயில்கள், குறிப்பாக மகேஸ்வரர் மற்றும் மனோன்மணி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. மோட்சம் அடையாத ஆன்மாக்களின் சாபத்தைப் போக்கவும், முன்னோர்களின் ஆசிகளைப் பெறவும் இந்த நாளில் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன.

25.12.2025 – வியாழன் சிதம்பரம் ஆருத்ரா தரிசனம் கொடியேற்றம்

சைவத் திருத்தலங்களின் கோயில் என்று போற்றப்படும் ஆகாயத் தலமான சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனம் ஆகிய இருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம் இன்று (டிசம்பர்-25) காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணி வரை நடைபெறுகிறது. மேள தாளங்கள் முழங்க தேவாரம் திருவாசகம் ஓதிட, வேத மந்திரங்கள் முழங்கிட கோயில் கொடிமரத்தில் கொடியேற்றுவர். பஞ்ச மூர்த்தி உலா உட்பிரகாரத்தில் நடக்கும்.

விஷ்ணுபிரியா

Tags : Shani ,Alwar ,Perumal ,Vainava ,
× RELATED பாதுகையின் பெருமை