×

நவகிரக தோஷம் போக்கும் ஆஞ்சநேயர்

நவகிரக தோஷம் போக்கும் ஆஞ்சநேயர்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரிலுள்ள சந்தப்பேட்டையில் 500 ஆண்டுகள் பழமையான பல்லவர்களால் கட்டப்பட்ட சீதாராம ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இங்கு மூலவராக 6 அடி உயரத்தில் கம்பீரத்தில் ஆஞ்சநேயர் அருட்பாலிக்கிறார். இவரை வடக்கு முகமான குபேர பாகத்தில் நின்று தரிசித்தால் கடன் தொல்லை, நோய்கள், நவகிரக தோஷங்கள், மனபயம், எமபயம் போன்றவை விலகும் என்பது நம்பிக்கை.

மஞ்சள் அரைத்து வழிபடும் ஆஞ்சநேயர்

புதுக்கோட்டை அறந்தாங்கியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள ‘அழியாநிலை’ எனுமிடத்தில் உள்ளது, விஸ்வரூப ஆஞ்சநேயர் கோயில். இங்கு திருமணத் தடை உள்ள பெண்கள் கோயிலிலுள்ள அம்மியில் மஞ்சள் அரைத்து அதனை ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தால், திருமணத்தடை விலகி நல்ல வரன் அமையும் என்கிறார்கள்.

நாவன்மை அருளும் அனுமன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வட்டம், இடுகம்பாளையத்தில் அமைந்துள்ளது ‘‘அனுமந்தராயசாமி’’ ஆலயம். இங்கு திருவருள் புரியும் ஜெயமங்கள் ஆஞ்சேநயர் புடைப்புச் சிற்ப வடிவில் உள்ளார். ஆறடி உயரத்தில் அருட்பாலிக்கும் இவரை வழிபட்டால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், மன உறுதி, நாவன்மை என அனைத்தையும் அருள்வதாக பக்தர்கள் நம்பிக்கை.

அனுமன் பிரதிஷ்டை செய்த லிங்கம்

கும்பகோணம் மன்னார்குடி சாலையில் உள்ள மருதாநல்லூர் எனும் திருக்கருக்குடியில் குற்குணலிங்கேஸ்வரரும் சர்வாலங்கார மின்னம்மை எனும் அத்வைத நாயகியும் அருளாட்சி புரிகின்றனர். ஏனாதி நாயனார் இத்தலத்தில்தான் அவதரித்தார். இத்தல ஈசன் ராமச்சந்திர மூர்த்தியால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அனுமந்தலிங்கேஸ்வரர் நான்முகனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். அம்பாள் திருமணத் திருக்கோலத்தில் அருளும் திருத்தலம் இது.

சங்கு சக்கர ஆஞ்சநேயர்

வட ஆற்காடு மாவட்டம் சோளிங்கர் கிராமத்திலுள்ள ஆஞ்சநேயர் கோயிலிலுள்ள ஆஞ்சநேயர் நான்கு திருக்கரங்களுடன், சங்குசக்கரம், ஏந்தி காட்சி தருகிறார். அபூர்வமான அமைப்பு இது.

வேலை வாய்ப்பு ஆஞ்சநேயர்

பெங்களூருவில் சேஷாத்திரிபுரம் எனும் இடத்தில் இருக்கும் பால ஆஞ்சநேயர், வேலை வாய்ப்புக்கு அருள்கிறார். இவருக்கு அர்ச்சனை செய்து, சில ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் வேலை வாய்ப்பு உண்டாகும் என நம்பப் படுகிறது. மிகச் சிறிய கோயில்தான்; ஆனாலும், கீர்த்திமிக்கது.

படிப்பு ஆஞ்சநேயர்

பெங்களூரு ஜெயநகரில் பிரசன்ன ஆஞ்சநேயர் அருள்கிறார். இவரை, ராகி குட்டா ஆஞ்சநேயர் என்கிறார்கள். சிறிய குன்றின்மீது நின்றிருக்கும் இந்த ஆஞ்சநேயர், பக்தர்கள் அனைவருக்கும் பல நன்மைகள் அருளி மகிழச் செய்கிறார். இவருக்கு அர்ச்சனை செய்து சில ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கினால் குழந்தைகள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள் என்கிறார்கள்.

கூத்தாடும் ஆஞ்சநேயர்

108 வைணவ திவ்ய தேசத்தில் ஒன்றான திருக்கூடலூரிலுள்ள பெருமாள் கோயிலின் முன்புறம் உள்ள சிறு சந்நதியில் கூத்தாடும் ஆஞ்சநேயரைத் தரிசிக்கலாம்.

நாகலட்சுமி

Tags : Anjaneyar ,Navagraha ,Sitarama Anjaneyar ,Pallavas ,Chandapettai, Kudiyatham town, Vellore district ,Kubera… ,
× RELATED திருவாரூர், தியாகராஜர் திருக்கோயில்