மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். ஆனால், அந்த மாதத்தினை சூன்ய மாதம், பீடை மாதம் என்று கூறுவார்கள். அது பீடை மாதமில்லை, பீடுடைய மாதம் என்று திருத்திக் கொள்ள வேண்டிய சிறப்புடைய மாதமாகும்.
மார்கழி என்றாலே முதலில் நமக்கு நினைவில் வருவது பஜனை. விடியற்காலை எழுந்து வாசல் தெளித்து பெரியதாக வண்ணக் கோலமிட்டு அதன் நடுவே பூசணிப்பூவினை வைத்து அலங்கரிப்பது வழக்கம். ஒவ்வொரு நாளும் என்ன கோலம் போடலாம் என்று தினமும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் போட்டி போட்டுக் கொண்டு போடுவார்கள். சில இடங்களில் கோலப்போட்டி நடைபெறுவதை இன்றும் வழக்கமாக கொண்டுள்ளனர். யார் வீட்டுக் கோலம் சிறப்பாக உள்ளது, பெரியதாக உள்ளது என்று ஒப்பிட்டு பார்ப்பார்கள்.
மார்கழி மாதத்தின் மற்றொரு சிறப்பு பெருமாள் கோயில் பஜனை. தினமும் விடியற்காலை, மேளதாளத்துடன் பஜனை பாடிக்கொண்டே கோயிலின் நான்கு மாடவீதிகளையும் சுற்றி வலம் வந்து இறுதியில் கோயிலில் வந்து நிறைவு செய்வார்கள். அவ்வாறு வலம் வருபவர்களை வீடுகளிலிருந்து பெண்கள் அவர்களை நமஸ்கரித்து ஆசி பெறுவர். பஜனை செய்பவர்கள் கோயிலை அடைந்ததும் பூஜைகள் நடைபெற்று பிரசாதமாக வெண் பொங்கல் வழங்கப்படும்.
மாலையில் கோயில்களில் இசை விருந்து மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆண்டாள் நாச்சியார் அருளிய திருப்பாவை தினமும் வீடுகளில் பாடப்படும். இசை அரங்குகளில் காதில் தேன்பாயும் நிகழ்ச்சிகள் களைகட்டும்.
மார்கழி மாதத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக ஹனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா போன்ற முக்கிய நாட்களும் கொண்டாடப்படும்.
வைகுண்ட ஏகாதசி, மாதம் தோறும் வரும் ஏகாதசி அன்று விரதம் இருந்தாலும் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வாய்ந்த நாளாகும். விடியற்காலை எழுந்து குளித்து கோயிலுக்குச் சென்று அன்று சொர்க்க வாசல் திறந்தவுடன் அதில் நுழைந்து இறைவன் நாமத்தை உச்சரித்துக் கொண்டே தரிசிப்பது விசேஷம். அன்று முழுதும் விரதம் இருந்து, உப்பில்லாமல் ஆகாரம் புசித்து, தூங்காமல் இறை வழிபாட்டில் நாளை கழிப்பார்கள். மாலை கோயிலுக்கு சென்று, இறை வழிபாடு செய்து, இரவு முழுதும் கண்விழித்து பரமபதம், பல்லாங்குழி, தாயகட்டம், ஏழாங்கல் போன்ற விளையாட்டுகளை விளையாடுவார்கள். பிறகு விடியற்காலை இறை வழிபாட்டுடன் நிறைவு செய்வார்கள்.
மறுநாள் துவாதசி. அன்று ஏழு அல்லது ஒன்பது வகை காய்கறிகளை சேர்த்து சமைப்பார்கள். அதில் அகத்திக்கீரை, நெல்லிக்காய் பச்சடி, பயத்தம் பருப்பு பாயசம் முக்கிய உணவாக பரிமாறப்படும். தொடர்ந்து திருவாதிரை பண்டிகை, அன்று களியும், ஐந்து அல்லது ஏழு வகை காய்கறிகள் சேர்த்து கூட்டு செய்து இறை வழிபாடு செய்வர்.
– சுதா, சென்னை.
