பழநி, டிச. 20: பழநி நகரில் 33 வார்டுகள் உள்ளன 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நகரில் கடந்த சில ஆண்டுகளாக தெரு நாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. சாலைகளில் நடந்து செல்வோரை கடிப்பது, வாகனங்களில் செல்வோரை விரட்டுவது போன்ற அட்டகாசங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் பெண்கள், முதியோர், குழந்தைகள் சாலைகளில் நடமாட முடியாத நிலை நிலவி வந்ததுடன், நாள்தோறும் நாய்க்கடிக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதை தொடர்ந்து பழநி நகரில் சுற்றி திரியும் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த நகராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது.
நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, ஆணையர் டிட்டோ ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த், சுகாதார அலுவலர் செந்தில் ராம் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், தன்னார்வலர்கள் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சுமார் 1,650 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 640 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் இந்நடவடிக்கை பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
