திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மலையாள முன்னணி நடிகர் திலீப் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், முதல் 6 குற்றவாளிகளுக்கு 20 வருடம் கடுங்காவல் சிறை விதித்தது. நடிகர் திலீப் உள்பட 4 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி அவர்களை நீதிமன்றம் விடுவித்தது. இந்நிலையில் இந்த வழக்கில் குற்றவாளியான கார் டிரைவர் மார்ட்டின் ஆண்டனியின் ஒரு வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில் பாதிக்கப்பட்ட நடிகை குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேதனையுடன் ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: எனக்கு எதிராக ஒரு கொடுமை நடந்தபோது உடனடியாக போலீசில் புகார் செய்ததும், சட்ட நடவடிக்கைக்கு முயற்சித்ததும் தான் நான் செய்த பெரும் தவறாகும். நடந்தது எல்லாம் என்னுடைய தலைவிதி என்று நினைத்து, யாருடனும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்திருக்க வேண்டும். பிறகு எப்போதாவது அந்த வீடியோ வெளியே வந்தால், ஏன் அப்போதே புகார் செய்யவில்லை என்று கேட்டு யாராவது என்னை குற்றம்சாட்டினால் அவர்களுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் தற்கொலை செய்திருக்க வேண்டும். இந்த வழக்கில் 20 வருடம் தண்டனை பெற்ற ஒருவர் சமீபத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் நான் தான் உங்களுடைய ஆபாச வீடியோவை எடுத்தேன் என்றும் சொல்லி இருக்கலாம். இதுபோன்ற கொடூரமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கும், விஷமத்தனமான தகவல்களை பரப்புபவர்களுக்கும் ஒன்றை மட்டும் கூற விரும்புகிறேன். உங்களுக்கோ, உங்களுடைய குடும்பத்தினருக்கோ இதுபோன்று ஒரு மோசமான நிலைமை வராமல் இருக்கட்டும். நான் ஒரு இரை அல்ல, பாதிக்கப்பட்டவளும் அல்ல. ஒரு சாதாரண பெண் மட்டுமே, தயவு செய்து என்னை வாழ விடுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
