பெங்களூரு: தங்கம் கடத்திய புகாரில் கைதான கன்னட நடிகையின் தடுப்புக்காவல் நடவடிக்கையை ரத்து செய்யக் கோரிய மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.கடந்த மார்ச் 3ம் தேதி துபாயிலிருந்து பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையம் வந்த கன்னட நடிகை ஹர்ஷவர்தினி ரண்யா ராவ், ரூ.12.56 கோடி மதிப்புள்ள 14.2 கிலோ தங்கக் கட்டிகளுடன் வருவாய் புலனாய்வுத் துறையினரிடம் (டிஆர்ஐ) சிக்கினார். விசாரணையில் இவர் சர்வதேச கடத்தல் கும்பலுடன் இணைந்து 100 கிலோவுக்கும் அதிகமான தங்கத்தை இந்தியாவுக்குள் கடத்தியதாகவும், ஹவாலா மூலம் ரூ.38.4 கோடியை துபாய்க்கு மாற்றியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
கிரிமினல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் மே மாதம் அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், ‘கோஃபேபோசா’ சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறையில் அடைக்கும் வகையில் ஏப்ரல் 22ம் தேதி தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி, இந்தத் தடுப்புக்காவலை ரத்து செய்யுமாறு நடிகையின் தாயார் எச்.பி.ரோகிணி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனு சிவராமன் மற்றும் விஜய்குமார் ஏ.பாட்டீல் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், ‘கடத்தல் நடவடிக்கைகளைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட தடுப்புக்காவல் நடவடிக்கை சட்டரீதியாகச் சரியானது’ என்று குறிப்பிட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஏற்கனவே ஆலோசனைக் குழுவும் இக்காவலை உறுதி செய்துள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் மூலம் நடிகை தொடர்ந்து ஓராண்டு சிறையில் இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், இந்த வழக்கில் நடிகையின் வளர்ப்புத் தந்தையான மூத்த ஐபிஎஸ் அதிகாரி கே.ராமச்சந்திர ராவ் மீதும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
