×

சபாநாயகர் தேநீர் விருந்து; பிரதமர் மோடி, பிரியங்கா கலகலப்பான பேச்சு: அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் இறுதி நாளான நேற்று மக்களவை வழக்கம்போல் கூடியது. வந்தே மாதரம் இசைக்கப்பட்ட பின் சபாநாயகர் ஓம் பிர்லா அவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா தனது அறையில் எம்பிக்களுக்கு தேநீர் விருந்து அளித்தார். இந்த விருந்தில் பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஒன்றிய அமைச்சர்கள் ராம் மோகன் நாயுடு, ராஜீவ் ரஞ்சன் சிங், சிராக் பஸ்வான், பிரலாத் ஜோஷி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி, என்சிபி -எஸ்பி சுப்ரியா சுலே, திமுக எம்பி ஆ.ராசா மற்றும் இதர எம்பிக்கள் கலந்து கொண்டு சபாநாயகருடன் தேநீர் அருந்தினார்கள். அப்போது பிரதமர் மோடி மற்றும் பிரியங்கா காந்தி நட்புடன் உரையாடினார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இல்லாததால், காங்கிரஸ் கட்சி சார்பில் கலந்து கொண்ட பிரியங்கா காந்தி , பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அருகில் அமர்ந்து இருந்தார். அவரை தொடர்ந்து பிரதமர் மோடி மற்றும் ஓம்பிர்லா ஆகியோர் அமர்ந்து இருந்தனர்.

சமீபத்தில் எத்தியோப்பியா, ஜோர்டான் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் குறித்து பிரதமர் மோடியிடம், பிரியங்கா விசாரித்தார். அதற்கு அந்தப் பயணம் நன்றாக இருந்தது என்று பதில் அளித்த மோடி,’ சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகச் சிறப்பாக முன்னேறி வரும் எத்தியோப்பியா நாடு குறித்து இந்தியாவில் பலரிடம் உள்ள எண்ணம், அந்நாட்டின் உண்மையான நிலைமையில் இருந்து முற்றிலும் மாறுபட்டது’ என்றார். பதிலுக்கு மோடி, வயநாடு தொகுதி மக்களுடன் எப்படி உரையாடுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு பிரியங்கா தற்போது தனது தொகுதி மக்களுடன் உரையாடுவதற்கு வசதியாக மலையாளம் கற்று வருவதாக தெரிவித்தார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் தர்மேந்திர யாதவ், குளிர்காலக் கூட்டத்தொடர் வெறும் 15 அமர்வுகளுடன் மிகக் குறுகிய கூட்டத்தொடர்களில் ஒன்றாக இருந்தது என்று கூறியபோது, ​​பிரதமர் மோடி அவரிடம் ஜாலியாக பேசினார். மோடி கூறுகையில்,’அதிக நாட்கள் கத்த வேண்டிய அவசியம் இல்லாததால், இது உங்கள் தொண்டைக்கு நல்லது’ என்றார். இதை கேட்ட தலைவர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.

ஆர்.எஸ்.பி. தலைவர் என்.கே. பிரேமச்சந்திரனும் கூட்டத்தொடரின் குறுகிய காலம் குறித்துப் புகார் தெரிவித்தார். அப்போது பிரியங்கா குறுக்கிட்டு, தன்னைப்போல பல எம்.பி.க்கள் எப்போதும் பிரேமச்சந்திரன் அவையில் நடந்துகொள்ளும் விதத்தைக் கவனித்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளின் பல்வேறு அம்சங்களைக் கற்றுக்கொள்ள முயற்சிப்பதாகக் கூறினார். அப்போது பிரேமச்சந்திரன் உட்பட சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவைக்கு நன்கு தயாராக வந்ததற்காக பிரதமர் மோடி அவர்களைப் பாராட்டினார். அப்போது குளிர்கால கூட்டத்தொடரை நன்றாக நடத்தியதற்காக தலைவர்கள் சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு நன்றி தெரிவித்தனர். இது குறித்து சபாநாயகர் தனது எக்ஸ் தள பதிவில், ” மக்களவையின் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, பிரதமர் மோடி மற்றும் அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுடன் இனிமையான உரையாடல் நடைபெற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் பங்கேற்றது எப்படி?
மழைக்கால கூட்டத்தொடருக்குப் பிறகு இதே போன்ற தேநீர் நிகழ்வை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் புறக்கணித்தனர். அப்போது அவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களைப் பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். இந்த முறை, குளிர்கால கூட்டத்தொடரின் போது சபாநாயகர் எதிர்க்கட்சிகளிடம் நியாயமாக நடந்துகொண்டதால், அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்ததால் அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.

எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் புகார்
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ’’இரு அவைகளிலும் 8மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதால் இந்த கூட்டத்தொடர் பயனுள்ளதாக இருந்தது. இந்த சட்டங்கள் சாமானிய மக்களின் அன்றாட வாழ்வியல் மாற்றங்களை கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி அரசினால் தொடங்கப்பட்ட சீர்திருத்த விரைவு ரயிலை வேகப்படுத்தும். காற்றின் மாசு குறித்த விவாதத்தை நடத்த முடியாததற்கு வருத்தப்படுகின்றேன். விவாதத்துக்கு அரசு முழுமையாக தயாராக இருந்தது. ஆனால் காங்கிரஸ் மற்றவர்களை அவையின் மையப்பகுதியில் போராட்டம் நடத்தத்தூண்டியது. எதிர்க்கட்சிகள் தான் விவாதத்தை தடுத்து நிறுத்தினார்கள்” என்றார்.

Tags : Speaker ,PM Modi ,Priyanka ,New Delhi ,winter ,Parliament ,Lok Sabha ,Vande Mataram ,Om Birla ,House ,Om… ,
× RELATED நயினார் அதிமுகவின் ‘பி’ டீம்: செங்கோட்டையன் பேட்டி