×

தன்னை பாதுகாத்த இயக்கத்தை விட்டு சென்ற செங்கோட்டையன் அம்மாவின் படத்தை பாக்கெட்டில் வைத்து சுற்றுவது இரட்டை வேடம்: தவெகவில் இருக்கும் மரியாதையை புரிந்துகொண்டால் நல்லது; முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கடும் தாக்கு

சென்னை: தன்னை பாதுகாத்த இயக்கத்தை விட்டு சென்ற செங்கோட்டையன் அம்மாவின் படத்தை பாக்கெட்டில் வைத்து சுற்றுவது இரட்டை வேடம் என்று முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறியுள்ளார். செங்கோட்டையன் அதிமுக ஆரம்பித்த காலத்தில் இருந்தே அந்த கட்சியில் பயணம் செய்தவர். கடந்த 1977ம் ஆண்டு தமிழக முதல்வராக எம்ஜிஆர் பதவியேற்றபோது முதல் முறையாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இந்நிலையில் திடீரென அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

பிரிந்தவர்களை இணைக்க கெடுவும் விதித்து வந்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக கூறி அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இதனால் அவர் திடீரென தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தவெகவில் இணைந்த அவருக்கு தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியை நடிகர் விஜய்
வழங்கினார். செங்கோட்டையன் ஏற்பாட்டில் விஜய் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 18ம் தேதி நடந்தது.

செங்கோட்டையன் ஏற்பாடு செய்த முதல் நிகழ்ச்சியே அவருக்கு மரியாதை கிடைத்தது என்று சொன்னால் அது தவெகவில் உள்ளவர்களுக்கு தான் வெளிச்சம். மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் பேசி முடித்ததும், அவருக்கு செங்கோட்டையன் ஆளுயர வெள்ளி செங்கோலை நினைவுப்பரிசாக வழங்கினார். ஜெயலலிதாவிடம் குனிந்து, குனிந்து பேசுவதுபோல், விஜய்யிடமும் குனிந்து குனிந்து பணிவோடு பேசினார். தவெகவில் இணைந்த பின்பும் ஜெயலலிதா படத்துடன் தான் செங்கோட்டையன் வருகிறார்.

ஈரோட்டில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் அதே பாணியில் வலம் வந்தார். பாக்கெட்டில் ஜெயலலிதா படம், தவெக கரை வேட்டி என வந்தார். கட்சி மாறினாலும் காட்சி மாற வில்லையே என்று செங்கோட்டையனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் நிகழ்ச்சிக்கு வந்த விஜய்யை வரவேற்கும் போது அங்கிருந்தவர்கள் செங்கோட்டையனை தள்ளிவிட்டனர். கீழே விழ சென்ற செங்கோட்டையனை விஜய்யின் பவுன்சர் ஒருவர் பிடித்ததால் உயிர் தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது எல்லாம் தேவையா என்ற அளவில் அவருக்கு நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கூறியதாவது: அம்மா கட்சியில் இருந்து போனதுக்கு அப்புறம், அம்மாவின் படத்தை வைத்து விட்டு செல்வது என்ன பிரயோஜனம். வீட்டிற்கு அன்னை இல்லம் என்று பெயர் வைத்து விட்டு, அன்னையை முதியோர் இல்லத்தில் சேர்த்து என்ன பிரயோஜனம். எங்க வீட்டுக்கு அன்னை இல்லம். அன்னை இருப்பதோ? முதியோர் இல்லம். அம்மாவின் படத்தை பாக்கெட்டில் வைத்து விட்டு, அவரை பாதுகாத்த இயக்கத்தை விட்டு, வேறு கட்சிக்கு போய் என்ன ஆக போகிறது.

அம்மாவின் படத்தை வைத்து இருப்பது இரட்டை வேடம். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. அதிமுகவில் எம்ஜிஆரால் வளர்ந்தவர் செங்கோட்டையன். அம்மாவால் உயர்த்தப்பட்டவர். எம்ஜிஆரால் சட்டமன்ற உறுப்பினர். அம்மாவால் அமைச்சர் ஆனார். அப்படியிருக்கும் தருவாயில், அவரின் கிளை அங்கே இருக்கலாம். ஆனால், வேர் அதிமுகவில் தான் இருக்கிறது. ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சியின் போது கட்சியினரால் செங்கோட்டையன் தள்ளி விடப்பட்டார். அதிமுகவில் இருந்த மரியாதைக்கும், அங்கு இருக்கும் மரியாதையையும் அவரே உணர்ந்து கொண்டால் நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sengottaiyan Amma ,Thaveka ,Former Minister ,Vaigaichelvan ,Chennai ,Sengottaiyan ,AIADMK ,
× RELATED நயினார் அதிமுகவின் ‘பி’ டீம்: செங்கோட்டையன் பேட்டி