புதுடெல்லி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்குப் பதிலாக, ‘விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார உத்தரவாத மிஷன்’(விபி ஜி ராம் ஜி) என்ற புதிய மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் துவங்கிய இந்த போராட்டத்தில் அடுத்தடுத்து காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி கட்சி எம்.பி.க்களும் பங்கேற்றனர். இரவில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்த இந்த தர்ணா போராட்டத்தில், ஒன்றிய அரசின் அவசரப் போக்கை கண்டித்தும், போதிய விவாதம் நடத்தாமல் நள்ளிரவில் மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படாமல், ஜனநாயகத்தை நசுக்கும் வகையில் ‘புல்டோசர்’ பாணியில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மகாத்மா காந்தி, ரவீந்தரநாத் தாகூரின் உருவப்படங்கள் மற்றும் பதாகைகள் உடன் அவர்கள் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு தொடங்கிய இந்த 12 மணி நேர தர்ணா போராட்டம் நேற்று நண்பகல் வரை நீடித்தது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சாகரிகா கோஸ் கூறுகையில், எதிர்க்கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் மசோதாவை அவையில் அறிமுகம் செய்வதற்கு ஐந்து மணி நேரத்திற்கு முன்பு தான் எங்களுக்கு நகலை வழங்கினார்கள். ஒரு முக்கியமான மசோதா விவாதத்திற்கான ஒரு தேர்வு குழுவிற்கு அனுப்பப்பட்டு இருக்க வேண்டும். மோடி அரசு மகாத்மா காந்தியை இரண்டாவது முறையாக கொலை செய்துள்ளது. அது ரவீந்தரநாத் தாகூரையும் அவமதித்துள்ளது \” என்றார். எம்பிக்களின் தொடர் தர்ணா போராட்டத்தால், நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றத்துடன் நேற்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை
* குளிர்கால கூட்டத்தொடரில் மாநிலங்களவையின் மொத்த அமர்வு 92 மணி நேரமாக இருந்தது. அவையின் செயல்திறன் 121 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
* முந்தைய இரண்டு கூட்டத்தொடர்களை காட்டிலும் அவையின் செயல்திறன் 31 சதவீதம் அதிகரித்தது. மாநிலங்களவையில் 8 மசோதாக்கள் நிறைவேற்றம்
* 59 தனிநபர் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
* 58 நட்சத்திரக் குறியிடப்பட்ட கேள்விகள், 208 பூஜ்ய நேர சமர்ப்பிப்புகள், 87 சிறப்பு குறிப்புகள் இடம்பெற்றன.
மக்களவை
* மக்களவையின் மொத்த அமர்வு நேரம் 92மணி நேரம் 25 நிமிடங்கள்.
* அவையின் செயல்பாடு 111 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
* வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு சிறப்பு விவாதம் 11மணி நேரம் 32 நிமிடங்கள் நடைபெற்றது. 65 உறுப்பினர்கள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.
* தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதம் சுமார் 13மணி நேரம் நடைபெற்றது. 63 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
* மொத்தம் 3449 நட்சத்திரக்குறியிடப்படாத கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.300 நட்சத்திர குறியிடப்பட்ட கேள்விகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் 72 நட்சத்திர குறியிடப்பட்ட கேள்விகளுக்கு வாய்மொழியாக பதில் அளிக்கப்பட்டது. பூஜ்ய நேரத்தின் போது 408 அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் எழுப்பப்பட்டது.372 பிரச்னைகள் விதி 377ன் கீழ் எடுத்துக்கொள்ளப்பட்டன.
* காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தியால் தொடங்கப்பட இருந்த காற்று மாசுபாடு குறித்த விவாதம் நடைபெறவில்லை.
மக்களவை 111%, மாநிலங்களவை 121 % செயல்பாடு
கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், 15 அமர்வுகளுடன் நேற்று நிறைவடைந்தது. இந்தத் தொடரில் மக்களவை 111 சதவீதமும், மாநிலங்களவை 121 சதவீதமும் செயல்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளன. மாநிலங்களவைத் தலைவராக துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் கூட்டத்தொடர் இதுவாகும். அதேபோல் மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா வழிநடத்தினார். மொத்தம் 8 முக்கிய மசோதாக்கள் இந்த கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்கூட்டத்தொடரின் மிக முக்கிய நிகழ்வாக, கடந்த 20 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு மாற்றாக, ‘விக்சித் பாரத் கிராம ரோஸ்கர் அவ்ர் மானவ் கரிமா’ என்ற புதிய மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அனுமதிக்கும் ‘சாந்தி’ மசோதா மற்றும் காப்பீட்டுத் துறை மசோதாக்களும் நிறைவேறின. டெல்லி காற்று மாசு குறித்த விவாதம் நடைபெறாமலேயே அவைகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
8 காங். எம்பிக்களுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்
விபி ஜி ராம் ஜி மசோதா மீது விவாதம் நடைபெற்றபோது 8 காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் அவமதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக பாஜ எம்பி நிஷிகாந்த் துபே மக்களவை சபாநாயகரிடம் நோட்டீஸ் வழங்கியுள்ளார். அவர்கள் மீது உரிமை மீறல் நடவடிக்கை தொடர்பாக சபாநாயகர் பரிசீலனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் போராட்டம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உத்தரவாத சட்டத்தை ரத்து செய்து விபி ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எம்பிக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர்கள் ஜீன் டிரெஸ், ராஜேந்திரன் நாராயணன், முகேஷ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி சசிகாந்த் செந்தில், திமுக எம்பிக்கள் முரசொலி மற்றும் தங்க தமிழ் செல்வன், சிபிஐ(எம்) எம்பி பிகாஷ் பட்டாச்சார்யா மற்றும் சிபிஐ(எம்எல்) லிபரேஷன் எம்பி ராஜா ராம் சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். இதனிடையே நரோக சங்கர்ஷ் மோர்ச்சா அமைப்பு போராட்டத்திற்கு தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
